உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்படும் சந்தைகளில் சுங்கம் வசூப்பதில் முறைகேடு

ஈரோடு, அக். 23: உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்படும் சந்தைகளில் சுங்க கட்டணம் வசூப்பதில் முறைகேடு நடந்து வருவதாக வேளாண் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டினர். ஈரோடு கோட்டத்திற்குட்பட்ட ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சி, பெருந்துறை ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட விவசாயிகளுக்கான குறைகேட்பு கூட்டம் ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.  கோட்டாட்சியர் முருகேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகள் பேசியதாவது: கீழ்பவானி பாசனப்பகுதியில் கொப்பு வாய்க்கால்கள் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதை பொதுப்பணித்துறையினர் உடனடியாக அகற்ற வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்படும் சந்தைகளில் சுங்கம் வசூலிப்பதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. சுங்க கட்டணம் குறித்து முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படுவதில்லை. மேலும், சுங்க கட்டணம் வசூல் தொடர்பாக ரசீது எதுவும் வழங்கப்படுவதில்லை. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் கோமாரி நோய் தடுப்பூசிகள் போடும் பணியினை தீவிரப்படுத்த வேண்டும். காலிங்கராயன் வாய்க்கால் இருகரைகளிலும் ஆங்காங்கே ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதை அகற்றி கரைகளை பலப்படுத்த பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அட்டவணைப்படி ஜூன் மாதம் பாசனத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டிருந்தால் தற்போது அணை நிரம்பி வீணாக தண்ணீர் வெளியேற்றும் நிலை வந்திருக்காது. எனவே, வரும் காலங்களில் காலிங்கராயன் பாசனத்திற்கு அட்டவணைப்படி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே, சாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அரசு அமல்படுத்த வேண்டும். பிரதமர் மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்த மஞ்சள் விவசாயிகளுக்கு பணம் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. பவானி காடையம்பட்டி, செங்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவதால் நீர்நிலைகள் பாதிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தடுக்க மாசுகட்டுப்பாடு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.19 என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால், இன்றைய இடுபொருள் செலவு, கூலி உள்ளிட்டவைகளை கணக்கிட்டால் கிலோ ரூ.25 என நிர்ணயித்தால் மட்டுமே விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும். குறிப்பாக, இடுபொருள் செலவினங்களை குறைக்கும் வகையில் உரம், பூச்சி மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். நெல் பயிரிடுவதன் மூலம் நஷ்டம் ஏற்படுவதால் விவசாயிகள் தங்களது நிலங்களை தரிசாக வைத்துள்ளனர். கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகை 2 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளது. கரும்பு வெட்டிய விவசாயிகளுக்கு பணம் கொடுக்காத ஆலைகள் மீது வருவாய்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சீல் வைக்க வேண்டும். இதுதவிர, சம்மந்தப்பட்ட ஆலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். காலிங்கராயன் வாய்க்கால் கரைகளில் பனை விதைகள் நடவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 46புதூர் ஊராட்சியில் குப்பைகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே தேக்கமடைந்து சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு விவசாயிகள் பேசினர். கூட்டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பெரியசாமி, வேலாயுதம், ராமசாமி, சுதந்திரராசு, சுப்பிரமணியம்,நேசமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: