×

களக்காடு அருகே கரையில் விரிசல் குளம் உடையும் அபாயம் மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைப்பு

களக்காடு, அக். 23:  களக்காடு அருகே உள்ள மேலப்பத்தையில் பெரிவிளாங்குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள 100 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. களக்காடு பேரூராட்சிக்கு பாத்தியப்பட்ட இந்த குளத்தில் அமலை செடிகள் ஆக்கிரமித்துள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருவதால் குளத்திற்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டு குளம் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இந்நிலையில் குளத்தின் மடை அருகே கரையில் அரிப்பு ஏற்பட்டு விரிசல் விழுந்தது. இதன் வழியாக தண்ணீர் வெளியேறி வந்தது. இதனால் குளம் உடையும் அபாயம் நிலவியது.  

இது குறித்து களக்காடு பேரூராட்சிக்கு விவசாயிகள் தகவல் கொடுத்தனர். பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுஷ்மா தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார் முன்னிலையில் மேற்பார்வையாளர்கள் சண்முகம், வேலு மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து மணல் மூட்டைகளை அடுக்கி விரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்ட மணல் மூடைகள் அடுக்கப்பட்டு விரிசல் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘குளத்தில் தண்ணீர் வற்றியதும், கரையை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என்றும், குளத்தை ஆக்கிரமித்துள்ள அமலை செடிகளை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Tags : shore ,Kalakkad ,
× RELATED மாஸ்க் அணிவதால் ஆபத்தா?: மயக்கவியல் டாக்டர் விளக்கம்