திருக்கனூர் அருகே பரபரப்பு சாலையில் தேங்கிய மழைநீரில் நாற்று நட்டு மக்கள் போராட்டம்

திருக்கனூர், அக். 23: திருக்கனூர் அருகே பழுதடைந்த சாலையில் தேங்கிய மழைநீரில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருக்கனூர் அருகே தேத்தாம்பாக்கம் கிராமத்தில் இருந்து தனியார் கம்பெனி வழியாக காட்டேரிக்குப்பத்திற்கு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக குமராபாளையம், காட்டேரிக்குப்பம், சந்தைப்புதுக்குப்பம் உ்ள்ளிட்ட கிராமங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர். இங்குள்ள தனியார் கம்பெனிக்கு கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால் சாலை முற்றிலும் சேதமடைந்து உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். தற்போது மழை பெய்வதால் சாலையில் மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக மாறி உள்ளது.

Advertising
Advertising

இதனை கண்டித்து நேற்று காலை குமராபாளையம், தேத்தாம்பாக்கம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தனியார் கம்பெனி அருகே சாலையில் தேங்கிய நீரில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்த காட்டேரிக்குப்பம் போலீசார் அங்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, இங்குள்ள தனியார் கம்பெனிக்கு பொருட்கள் ஏற்றிவரும் கனரக வாகனங்களால் இந்த சாலை சேதமடைந்து மழைநீர் தேங்கியுள்ளது. இதில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்என்றனர். இதையடுத்து கம்பெனி நிர்வாகம், ஒரு வாரத்தில் சாலையை சரி செய்து தருவதாக உறுதி அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: