தவளக்குப்பத்தில் பரபரப்பு மது கொடுத்து ஐடி ஊழியரிடம் ரூ.1.5 லட்சம் நகைகள் கொள்ளை

பாகூர், அக். 23: தவளக்குப்பத்தில் ஐடி ஊழியருக்கு மது கொடுத்து ரூ.1.5 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்ற வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பூபதிராஜா(39). சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப (ஐடி) கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் தற்போது தவளக்குப்பம் முத்துமுதலியார் நகரில் வீடு வாடகை எடுத்து தனியாக தங்கியுள்ளார். காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி புதுச்சேரி முழுவதும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இது தெரியாத பூபதிராஜா தவளக்குப்பத்தில் உள்ள மதுகடைக்கு குடிக்க சென்றார். அங்கு கடை மூடி இருந்தது. அப்போது, அங்கிருந்த 2 பேர் எங்களிடம் மது உள்ளது, சேர்ந்து குடிக்கலாமா என கேட்டுள்ளனர். தாங்கள் உள்ளூர் என அவர்கள் தெரிவிக்கவே, பூபதிராஜா அந்த 2 பேரையும் தனது காரில் ஏற்றிக் கொண்டு அவர் தங்கியுள்ள வீட்டிற்கு சென்றார். அங்கு 3 ேபரும் சேர்ந்து மது குடித்துள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் பூபதிராஜா படுத்து தூங்கி விட்டார். பின்னர் இரவு 9 மணியளவில் எழுந்து பார்த்தபோது, அவர் அணிந்திருந்த செயின், மோதிரம் திருட்டு போயிருந்தது. மேலும் அவருடன் குடித்த 2 பேரும் மாயமாகி இருந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பூபதிராஜா, சம்பவம் குறித்து தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தவளக்குப்பம் முத்துமுதலியார் நகரை சேர்ந்த செல்வமணி (24), பெரியகாட்டுப்பாளையத்தை சேர்ந்த நாகமுத்து ஆகியோர் தனது வீட்டுக்கு குடிக்க வந்ததாகவும், தான் போதையில் தூங்கியவுடன் நகைகளை திருடிச்சென்று விட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து தவளக்குப்பம் மதுக்கடை அருகே நின்றிருந்த செல்வமணியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி, அவரிடமிருந்த செல்போன், இரண்டரை பவுன் செயின், தலா 1 பவுன் கொண்ட 2 மோதிரம் உள்ளிட்ட ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: