விழுப்புரம் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

விழுப்புரம், அக். 23: விழுப்புரம் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ரூ.300 கோடி பண பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை முடங்கியது.பொதுத்துறை வங்கிகள் இணைப்பை உடனடியாக கைவிட வேண்டும். வங்கிகளை மறுசீரமைக்க வேண்டும். வங்கிகளில் கடன் வாங்கி திரும்ப செலுத்தாத பெரும் பணக்காரர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும். வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் அபராத வட்டி வசூலிக்கக்கூடாது. வாடிக்கையாளர் சேவைக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும். வாடிக்கையாளர் சேவையை விரிவுபடுத்திட, வங்கிகளில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். கிராமப்புற வங்கி சேவைகள் விரிவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 120 கிளைகளில் பணியாற்றும் 950 ஊழியர்கள் இந்த ஸ்டிரைக்கில் பங்கேற்றனர். வேலைநிறுத்தம் காரணமாக விழுப்புரத்தில் இந்தியன்வங்கி, பாரத ஸ்டேட் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

 மேலும் கிராமப்புறங்களில் வங்கிகள் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். வங்கியில் பணம்போடுவது, நகைக்கடன், விவசாயக்கடன் வழங்கும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் ரூ.300 கோடி பண பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை முடங்கியது. இதனிடையே விழுப்புரம் மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் சார்பில் நேருஜி வீதியில் உள்ள இந்தியன் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுச்செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் ராஜமாணிக்கம் வேலைநிறுத்தம் குறித்து விளக்கிபேசினார். நிர்வாகிகள் நாராயணசாமி, ஜெயச்சந்திரன், பாலமுருகன், சொக்கநாதன், பாலாஜி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Stories: