×

மர்ம காய்ச்சலால் பாதிப்பு மோகூர் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

கள்ளக்குறிச்சி, அக். 23:     கள்ளக்குறிச்சி அடுத்த மோகூர் கிராமத்தில் பெரும்பாலான மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களில் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 4 பேரில் ஒவ்வொருவராக சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. எனவே மோகூர் கிராமத்தில் சிறப்பு சிகிச்சை முகாம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து மோகூர் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி கள்ளக்குறிச்சி சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஜெமினி மேற்பார்வையில் மேலூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பங்கஜம் தலைமையில் மோகூர் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமில் டாக்டர் இளங்கோவன் மற்றும் செவிலியர்கள் கிராம மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கி சிகிச்சை அளித்தனர்.

மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. மாத்திரை, மருந்துகள், நிலவேம்பு கசாயம், ஓஆர்எஸ் கரைசல் ஆகியவை வழங்கப்பட்டன. கிராம செவிலியர்கள் அந்த கிராமத்தில் வீடு வீடாக சென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி கிடப்பவர்களை கண்டறிந்து சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைத்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மகாலிங்கம், ரவி, ஆறுமுகம் ஆகியோர் தலைமையிலான குழுவினர்கள் வீடு வீடாக சென்று கொசுப்புளு உற்பத்தியாகிறதா என்பதனை கண்டறிந்து காலை, மாலை நேரங்களில் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மோகூர் அருகில் உள்ள க.அலம்பலம் கிராமத்தில் மக்களுக்கு காய்ச்சல் பரவாமல் இருக்க பள்ளி நல வாழ்வு மருத்துவர்கள் இந்திரா, பிரியதர்ஷினி ஆகியோர் தலைமையிலான குழுவினர் அங்கு முகாமிட்டு  மக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.  நத்தைமேடு கிராமத்தில் நடமாடும் மருத்துவர் சவுந்திரியன் தலைமையிலான குழுவினர் மக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்துவருகின்றனர்.

Tags : camp ,village ,
× RELATED பழவேற்காடு அடுத்த கோடைக்குப்பம் மீனவ...