×

சேத்தியாத்தோப்பில் பாழடைந்த மாணவர் விடுதியை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவு

சேத்தியாத்தோப்பு, அக்.23:   சேத்தியாத்தோப்பில் அரசு ஆதிதிராவிட நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாணவர் விடுதி பாழடைந்த கட்டிடத்தில் இயங்கி வருகின்றது. இதனால் மாணவர்கள் விடுதியில் அச்சத்துடன் தங்கி இருந்தனர். அசம்பாவிதம் ஏற்படுமோ என்ற நிலையில் இருந்த கட்டிடத்தை ஆய்வு செய்ய வந்த சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன் பாழடைந்த மாணவர் விடுதி கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இந்த ஆய்வு அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தார். இதையடுத்து அவரது  உத்தரவின்பேரில் நேற்று கடலூர் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர்  வெற்றிவேல், சிதம்பரம் வருவாய் வட்டாட்சியர் சுரேஷ்குமார் ஆகியோர் கட்டிடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது விடுதி சமையலர், மற்றும் துப்புரவாளர் ஆகியோரிடம் விடுதியில் தண்ணீர் தேங்கி நிற்காமலும், குப்பைகளை கொட்டாமல் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் இடிந்து வரும் மாணவர் விடுதி கட்டிடத்தை இடித்து அகற்றி புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் வரை மாணவர் விடுதியை தற்காலிகமாக வேறு புதிய கட்டிடத்திற்கு இடமாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் வெற்றிவேல் நேரடியாக சென்று விடுதிக்கு மாற்று இடம் தேடும் பணியில் இறங்கி கட்டிடங்களை சுற்றி பார்த்தார். மேலும் அவர் கூறுகையில் மாணவர்கள் விடுதி இயங்கி வரும் கட்டிடம் மாணவர்களுக்கு அச்சுறுத்தலாகவும், ஆபத்தான நிலையிலும் உள்ளதால் விரைவில் இடித்து அகற்றும் பணி நடைபெற உள்ளது. மேலும் மாணவர் விடுதிக்கு புதிய கட்டிடமும் கட்டப்படும் என்றும் தெரிவித்தார். ஆய்வின்போது விடுதி காப்பாளர் செல்லபாண்டியன் உடனிருந்தார்.


Tags : student hostel ,
× RELATED புதுச்சேரியில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு திரும்பப்பெறப்பட்டது