மேல்வடக்குத்து காலனியில் மயான பாதையை எம்எல்ஏ ஆய்வு

நெய்வேலி, அக். 23:  நெய்வேலி அடுத்த வடக்குத்து ஊராட்சியில் உள்ள மேல் வடக்குத்து காலனியில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் உயிரிழந்த உறவினர்களை தங்கள் ஊரில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈசான ஏரியில் அடக்கம் செய்வது வழக்கம். ஆனால் மக்கள் மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் விளை நிலங்களில் பல ஆண்டு காலமாக உடல்களை சுமந்து சென்றனர். மேலும் இதுகுறித்து ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்து வந்தனர். இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் முதலமைச்சரின் தனி பிரிவு, மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர் ஆகியோரிடம் பல வருடங்களாக மனு அளித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்திற்கு வந்த சட்டமன்ற மதிப்பீட்டு குழுவிடம் கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கடலூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இது குறித்து வலியுறுத்தியதால் வடக்குத்து காலனியில் சாலை அமைத்து தர உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன் அடிப்படையில் அப்பகுதியில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என கண்டறிய சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஜெயசித்ரா, வடக்குத்து கிராம நிர்வாக அலுவலர் சண்முகம், ஊராட்சி செயலாளர் மணிவாசகம் மற்றும் கிராம பொதுமக்கள் மயான பாதையை ஆய்வு செய்தனர். பின்னர் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து மயான பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.Tags : MLA ,colony ,
× RELATED பணமதிப்பு நீக்கத்தால் பொருளாதார மந்தநிலை: ஆய்வில் தகவல்