×

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் குளம்போல் தேங்கிய மழைநீர்
பெண்ணாடம், அக். 23: பெண்ணாடம் அடுத்துள்ள அரியராவி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கழிவறை வசதி உள்பட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை என மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுமட்டும் இன்றி தற்போது பெய்து வரும் பருவ மழையால் பள்ளியை சுற்றியும், பள்ளி வளாகத்திலும் மழைநீர் தேங்கியதால் குழந்தைகள் பள்ளி வகுப்பறைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அதிக அளவில் கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. தற்போது அதிக அளவில் குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருவதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே பள்ளி கல்வித்துறை உடனடியாக பள்ளியில் பாழடைந்து கிடக்கும் கழிவறையை சீரமைத்து, தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Panchayat Union School ,
× RELATED கண்மாயில் தேங்குமா மழைநீர்?