இனிப்பு, காரம் தயாரிக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்

கடலூர்,  அக். 23: தீபாவளியை முன்னிட்டு இனிப்பு, காரம், மற்றும் பேக்கரி  பொருட்கள் தயாரிப்பாளர்கள், ஓட்டல் நடத்துபவர்கள் மற்றும் மளிகை  வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் கடலூரில் நடந்தது. கடலூர் மாவட்ட தமிழ்நாடு உணவு  பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நடத்திய கருத்தரங்கில் உணவு  பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன், உணவு பாதுகாப்பு  அலுவலர்கள் சந்திரசேகரன், ஏழுமலை, நல்லதம்பி சுப்பிரமணியம், ரவிச்சந்திரன்  ஆகியோர் கருத்துரையாற்றினர்.அப்போது அவர்கள் கூறுகையில், இனிப்பு,  கார வகைகள் தயாரிக்கும்  இடங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க  வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் சூடு படுத்தி  உபயோகிக்கக்கூடாது. பொட்டலங்களில் பேக்கிங் செய்து விற்கப்படும் இனிப்பு  மற்றும் கார வகைகளின் தயாரிப்பு தேதி உபயோகப்படுத்தும் காலம், தயாரிப்பாளர் முகவரி, உணவு பாதுகாப்புத்துறை உரிமம், பதிவு எண் ஆகியவை  தெளிவாக தெரியும்படி அச்சிடப்பட வேண்டும். தயாரிக்கப்படும் இனிப்பு  வகைகளில் சட்டத்தில் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை சேர்க்கக்கூடாது. இனிப்புகளை பேக்கிங் செய்யும் பட்சத்தில் காலாவதி தேதி போன்ற  விவரங்களுடன் இனிப்பு தயாரிக்க பயன்படுத்திய மூலப்பொருட்கள், உணவுப்பொருட்கள் மற்றும் ஒவ்வாத பொருட்கள் ஏதேனும் இருப்பின் அதன் விவரங்களை  தெளிவாக அச்சிட வேண்டும். சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர்  தூய்மையாக இருத்தல் வேண்டும். இனிப்பு, கார வகைகளை
தயாரிக்க  பயன்படுத்தப்படும் நீரின் தரத்தை அறியும் பொருட்டு பகுப்பாய்வு சான்றிதழ்  பெற்றிருத்தல் வேண்டும்.

சுத்தமான தண்ணீரில்தான் பொருட்களை சுத்தம் செய்ய  வேண்டும். உணவு வியாபாரம் முடிந்தவுடன் பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும்  பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்து பூஞ்சை தொற்று ஏற்படாதவாறு உலர வைத்தல்  வேண்டும். உணவுகள் மற்றும் பரிமாறுதல் ஆகிய பணிகளை செய்பவர்கள் கையுறைகள்  மற்றும் தலை கவசம் ஆகியவற்றை அணிய வேண்டும். பண்டிகை காலங்களில் தற்காலிக  உணவுக் கூடங்கள் திருமண மண்டபங்கள், வீடுகள் ஆகிய இடங்களில் ஆர்டரின்  பெயரில் விற்பனைக்காக தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு உணவு  பாதுகாப்பு சட்ட விதிகளின்படி உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்று  விற்பனை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர்  ரங்கராஜன் பேசுகையில், ஆண்டுதோறும் வழக்கமாக 20 ஓட்டல் உரிமையாளர்களையும்,  ஸ்வீட் கடைக்காரர்களையும் அழைத்து  கடமைக்காக கூட்டம் நடத்த கூடாது. உணவு  பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ள சட்ட திட்டங்களை நாங்கள் பின்பற்றி  வருகிறோம், பின்பற்றுவோம் எனவும் உறுதி கூறுகிறோம். அதே நேரத்தில்  மக்களின் உடல் நலத்தை பாதுகாக்கும்  விஷயத்தில் உணவு பாதுகாப்புத்துறையினர் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

Tags : space ,
× RELATED விண்வெளியில் பிஸ்கட்!