×

குளச்சலில் பள்ளி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது

நாகர்கோவில், அக்.23:   குளச்சல் சப் இன்ஸ்பெக்டர் ஜோதி தனிஸ்லாஸ் தலைமையில் நேற்று முன் தினம் மாலை, குளச்சலில் உள்ள ஒரு பள்ளி அருகே போலீசார் கண்காணித்து கொண்டு இருந்தனர். அப்போது பள்ளிக்கு அருகே உள்ள ஒரு இடத்தில், இரு வாலிபர்கள் நின்று கொண்டு பள்ளியில் இருந்து வந்த மாணவர்கள் சிலருக்கு ஏதோ சப்ளை செய்து கொண்டு இருந்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர்கள் தப்ப முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் சோதனை நடத்திய போது பையில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முட்டம் பகுதியை சேர்ந்த புரூஸ்லி கீதன் (25) மற்றும் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (23) என்பதும், பள்ளி அருகே நின்று கொண்டு மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : school ,Kolachal ,
× RELATED கஞ்சா, மது போதையில் ரகளை ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டருக்கு அடிஉதை: ரவுடி கைது