×

முக்கடல் நிரம்பியதால் தண்ணீர் தட்டுப்பாடு வராது புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் 2020 மே மாதத்தில் முடிவடையும் தளவாய்சுந்தரம் பேட்டி

நாகர்கோவில், அக். 23 :  முக்கடல் அணை நிரம்பி உள்ளதால், இனி தண்ணீர் தட்டுப்பாடு வராது என்றும், புத்தன் அணை குடிநீர் திட்ட பணியை வரும் மே மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தளவாய் சுந்தரம் கூறினார். நாகர்கோவில் மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் முக்கடல் அணை தற்போது பெய்து வரும் மழையால் முழு கொள்ளளவான 25 அடியை எட்டி உள்ளது. கடந்த இரு வருடங்களில் இப்போது தான் அணை நிரம்பி உள்ளது. இதையடுத்து தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் அதிகாரிகள் நேற்று முக்கடல் அணையை பார்வையிட்டு மலர்தூவி பூஜை நடத்தினர். மாவட்ட பால் வள தலைவர் அசோகன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், பொறியாளர் பால சுப்பிரமணியம், அதிமுக மாணவரணி செயலாளர் மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், மாநகர செயலாளர் சந்துரு மற்றும் பலர் கலந்து கொண்டனர். முக்கடல் அணையின் கீழ் பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவையும் தளவாய் சுந்தரம் பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறுகையில், முக்கடல் அணை நிரம்பியுள்ளதால் நாகர்கோவில் மாநகராட்சியில் ஓராண்டுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. மேலும் ரூ.250 கோடியில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. வரும் 2020 மே மாதத்திற்குள் இந்த பணிகள் முடிவடைந்து விடும். எனவே நாகர்கோவில் மாநகரில் இனி குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மேலும் பாதாள சாக்கடை பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்த பணிகள் முடிந்து நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சுமார் 500 கி.மீ சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என்றார்.


Tags : Water shortage ,drowning ,Buddha Dam ,
× RELATED அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி...