×

1000 லஞ்சம் வாங்கிய வழக்கில் குமரி வணிக வரித்துறை அதிகாரிக்கு 4 ஆண்டு ஜெயில் நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவு

நாகர்கோவில், அக்.23 : தொழில் நிறுவனத்தை பதிவு செய்ய 1000 லஞ்சம் வாங்கிய, வணிக வரித்துறை அதிகாரிக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கடந்த 2010 ல் தொழில் நிறுவனம் தொடங்க திட்டமிட்டு, அதை பதிவு செய்வதற்காக குமரி மாவட்ட வணிக வரித்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டார். அப்போது அங்கு வணிக வரித்துறை அதிகாரியாக இருந்த செல்வராஜ், உதவி வணிக வரித்துறை அதிகாரி சுப்புராம் ஆகியோர் லஞ்சம் கேட்டனர். செல்வராஜ் ₹2000 மும், சுப்புராம் ₹1000மும் லஞ்சம் கேட்டுள்ளனர்.

இது குறித்து ராஜேந்திரன், குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார்  வழக்கு பதிவு செய்து, லஞ்ச பணத்தை செல்வராஜ் மற்றும் சுப்புராம் ஆகியோர் வாங்கும் போது கையும், களவுமாக பிடித்தனர். 23.6.10 ல் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு, நாகர்கோவில் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த  சில ஆண்டுகளுக்கு முன் செல்வராஜ் இறந்தார். இதனால் அவரது பெயர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, சுப்புராம் மீது மட்டும் வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அருணாசலம் நேற்று தீர்ப்பளித்தார். இதில் சுப்புராமுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.


Tags : business tax department ,Kumari ,jail ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...