நாலாட்டின்புதூர் அருகே மின்கம்பியை துண்டித்த இருவருக்கு ஓராண்டு சிறை

தூத்துக்குடி, அக். 23: நாலாட்டின்புதூர் அருகே மின் கம்பியை  துண்டித்த இருவருக்கு தூத்துக்குடி கோர்ட் ஓராண்டு சிறை விதித்தது. தூத்துக்குடி மாவட்டம்  சிதம்பரம்பட்டியைச் சேர்ந்த மாரிகாளை மனைவி கோமதி (50). இவரது வீட்டை ஓட்டி சென்ற பக்கத்து வீட்டின் மின்கம்பியை கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி கோமதியும், வீட்டுக்கு வந்திருந்த உறவினரான செட்டிக்குறிச்சியை சேர்ந்த நல்லுசாமி மகன் காளிராஜ் (27) என்பவரும் சேர்ந்து துண்டித்தனர்.

இதுகுறித்து பக்கத்து வீட்டுக்காரரான சுப்பையா நாலாட்டின்புதூர் மின்வாரியத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் உதவிப் பொறியாளர் லட்சுமி பிரியா நாலாட்டின் புதூர் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் விஸ்வநாத், குற்றம்சாட்டப்பட்ட காளிராஜ், கோமதி ஆகிய இருவருக்கும் தலா ஓராண்டு சிறை, ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஆண்ட்ரூமணி ஆஜராகி வாதாடினார்.

Related Stories: