பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் கோரம்பள்ளம் குளத்துநீர் வெளியேறினால் உப்பாத்து ஓடை கரைகள் உடையும் அபாயம்

ஸ்பிக்நகர், அக். 23: பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் தூத்துக்குடி  கோரம்பள்ளம் குளத்தின் உபரிநீர் உப்பாத்து ஓடைக்கு செல்லும் வழியில்  சுமார் 20க்கும் மேற்பட்டஇடங்களில் கரைகள் பலமிழந்துள்ளன. இதனால் உபரிநீர் வெளியேறும் போது வரத்து ஓடை கரைகள் உடையும் அபாயம் நிலவுவதாக என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தூத்துக்குடி அடுத்து அமைந்துள்ள கோரம்பள்ளம்  குளம் முழுவதுமாக நிரம்பினால் 2 ஆண்டுகளுக்கு மாவட்டம்  முழுவதும் விவசாயத்திற்கு போதுமானதாக அமையும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக  கோரம்பள்ளம் குளம் முழுவதுமாக நிரம்பவில்லை. இதற்கு காரணம் குளத்தை  தூர்வாராமல் கிடப்பில் போட்டதே காரணமாகக் கூறப்படுகிறது. தற்போது கோரம்பள்ளம்  குளத்தின் ஒருபகுதி தூர்வாரப்பட்டாலும் பெரும்பாலான  பகுதிகள் தூர்வாரப்படாமல் மணல் திட்டுகளாகவும், கருவேல மரங்கள்சூழ்ந்த  நிலையிலும் காட்சியளிக்கிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக கோடை காலங்களில்  தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவந்தது.

2015ம்  ஆண்டு பெய்தமழையில் கோரம்பள்ளம் குளத்திலிருந்து வெளியேற்றப்பட்டஉபரிநீர்  உப்பாத்து ஓடைக்கு செல்லும் வழியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால்  வீரநாயக்கந்தட்டு, அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், காலாங்கரைபகுதி மக்களின்  விவசாய நிலங்கள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கின. இதனால் அங்கு பயிரிடப்பட்ட  நெல், வாழை, உளுந்து என அனைத்தும் வீணாகியது. இதனால் விவசாயிகள் பெரும்  கடன்சுமைக்கு தள்ளப்பட்டனர். இதேபோல் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலை,  தூத்துக்குடி- நெல்லை சாலை, கலெக்டர் அலுவலகம், கோரம்பள்ளம்,  அத்திமரப்பட்டி, முள்ளக்காடு, முத்தையாபுரம், ராஜிவ்நகர்,  கோயில்பிள்ளை நகர், தெர்மல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது.  பலஇடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து கொண்டதால் 1 வாரத்திற்கும்  மேலாக பொதுமக்கள்வீட்டைவிட்டு வெளியேறி முகாம்களிலும், உயரமான இடங்களிலும்  தங்கும்நிலை உருவானது.

இதையடுத்து கரைகளை பலப்படுத்துகிறோம் என்று  பெயரளவிற்கு வேலைகள் நடந்தன. இதுவிஷயத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கண்டுகொள்ளாமல் அலட்சியப் போக்குடன் நடந்துகொண்டதாக சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டினர். குறிப்பாக கரைகள் பலப்படுத்தும் பணி முற்றிலும் முடிக்கப்படாததால் தற்போது  ஆங்காங்கே பெரிய உடைப்பு ஏற்பட்டது போல காட்சியளிக்கிறது. 2015ம் ஆண்டு  தண்ணீர் அதிகமாக வெளியேறியதால் கரையில் உடைப்பு ஏற்பட்டது. ஆனால், தற்போதுள்ள  சூழலில் கோரம்பள்ளம் குளம் நிரம்பிசாதாரணமாகதண்ணீர் வெளியேற்றினாலே  ஆங்காங்கே உடைப்புகள் ஏற்படும் சூழல் காணப்படுகிறது.

குறிப்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியப்  போக்கால் தூத்துக்குடி  கோரம்பள்ளம் குளத்தின் உபரிநீர் உப்பாத்து ஓடைக்கு  செல்லும் வழியில்  சுமார் 20க்கும் மேற்பட்டஇடங்களில் கரைகள்  பலமிழந்துள்ளதால் இதனால் உபரிநீர் வெளியேறும் போது வரத்து ஓடை கரைகள் உடையும்  அபாயம் நிலவுவதாக என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி குளத்துப் பகுதிகளிலும், உபரிநீர் உப்பாத்துக்கு ஓடைக்கு செல்லும் வரத்து ஓடை கரைகளையும் முழுமையாக பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Related Stories: