மாதவரம் தோட்டக்கலை சார்பில் விதைப்பந்து பட்டாசு விற்பனை : செம்மொழி மற்றும் டவர் பூங்காவில் கிடைக்கும்

திருவொற்றியூர்: மாதவரம் தோட்டக்கலை சார்பில், தீபாவளியை மாசில்லாத பண்டிகையாக கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாதவரம் பால்பண்ணை உள்ள தோட்டக்கலை பூங்காவில் விதைப்பந்து பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, களிமண்ணில் செய்யப்பட்ட ஊசி வெடி, சரவெடி, மத்தாப்பு, ராக்கெட், சங்கு சக்கரம் மற்றும் லட்சுமி வெடி போன்ற தோற்றங்களை வடிவமைத்து அதில் உரங்கள் மற்றும் கத்தரிக்காய், புடலங்காய், பாகற்காய், பூசணிக்காய் உட்பட காய்கறிகளின் விதைகள் மற்றும் பூக்களின் விதைகளை வைத்துள்ளனர்.

இந்த வெடியானது வெடிக்காது. மாறாக வெடிபொருள் மாதிரி உருவாக்கப்பட்ட விதைகளை அப்படியே நம் வீட்டிலோ அல்லது சிறிய பூத்தொட்டியிலோ வைத்தால் நான்கு அல்லது ஐந்து நாட்களில் அது செடியாக வளர்ந்துவிடும். இந்த விதை வெடிகளை இரண்டு ரூபாய்க்கு மாதவரம் தோட்டக்கலை பூங்காவில் விற்பனை செய்தும் வருகின்றனர். இங்கு மட்டுமன்றி சென்னை செம்மொழி பூங்காவிலும், அண்ணாநகர் டவர் பூங்காவிலும் விற்பனைக்கு வைத்துள்ளனர். பசுமையை பாதுகாக்க மாதவரம் தோட்டக்கலை சார்பில் எடுக்கப்பட்ட இந்த புதிய முயற்சியை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

Tags : Seedball Fireworks Sale ,
× RELATED மாதவரம் தோட்டக்கலை சார்பில்...