×

மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தர நிர்ணய சான்று

வேளச்சேரி: தேசிய தர உறுதி திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவைகள், தரமான சுகாதார குறியீடு, முறையான பராமரிப்பு, மருத்துவ சேவைகள் குறித்து நோயாளிகளின் கருத்து ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு சிறந்த மருத்துவமனைகள் தேர்வு செய்யப்படுகின்றன. அவற்றுக்கு, ‘தேசிய தர நிர்ணய சான்று’ வழங்கப்படுகிறது. இத்தகைய சான்று பெறும் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக ஊக்கத்தொகை, இதர வசதிகளை மேற்கொள்ள நிதி வழங்கப்படுகிறது.  அதன்படி, மாநில அளவில் தேசிய தர நிர்ணய சான்றுக்கு    மேடவாக்கம்  மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தேர்வாகியுள்ளது.   இதற்காக 3 ஆண்டுகளில் தலா ₹3 லட்சம் வீதம் மொத்தம் ₹9 லட்சம் கூடுதல் ஊக்கத்தொகை கிடைக்கும்.

இதுகுறித்து வட்டார மருத்துவர் ரவிச்சந்திரன் கூறுகையில், ‘‘மேடவாக்கம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தர நிர்ணய சான்று கிடைத்துள்ளது. சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் வசதிகளுக்கு, 90 மதிப்பெண்களை மத்திய அரசு ஆய்வு குழு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச்சான்று கிடைத்துள்ளது. இதன்  மூலம் ஊக்க தொகையாக, ஆண்டுக்கு ₹3 லட்சம் வீதம் மூன்று ஆண்டுக்கு 9 லட்சம் கிடைக்கும். இந்த நிதியானது சுகாதார மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும். இதேபோல் சிறந்த சுகாதார நிலையம் என மாநில அளவில் விருதும், ஆண்கள் கருத்தடைக்கும் விருது பெற்றுள்ளோம்’’ என்றார்.

Tags : Medavakkam ,Primary Health Center ,
× RELATED சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு