இரண்டு கார்கள் உரசியதால் தகராறு போக்குவரத்து எஸ்ஐ - ஐடி ஊழியர் ரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை

சென்னை: கார்கள் உரசியது தொடர்பாக நடந்த சண்டையை தடுக்க முயன்ற போது,  போக்குவரத்து உதவி ஆய்வாளரும், ஐடி நிறுவன ஊழியரும் சாலையில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட சம்பவம் தேனாம்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனாம்பேட்டை போக்குவரத்து பிரிவு எஸ்ஐ குமார் (52). இவர், ேநற்று முன்தினம் இரவு தேனாம்பேட்டை செனடாப் முதல் தெரு சந்திப்பில் பணியில் இருந்தார். அப்போது, 56 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஓட்டி வந்த காரும், ஐடி ஊழியர் வெற்றிவேல் முருகன் (32) என்பவர் ஓட்டி வந்த காரும் உரசிக்கொண்டன. இருவரும் சாலையிலேயே கார்களை நிறுத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே சண்டையை நிறுத்தி, போக்குவரத்தை சரிசெய்ய எஸ்ஐ குமார் அங்கு சென்றார். இதையடுத்து 56 வயது மதிக்கத்தக்க நபர் தனது காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டார். ஆனால், ஐடி ஊழியரான வெற்றிவேல்முருகன் காரை எடுக்காமல் போக்குவரத்து எஸ்ஐயிடம்  கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Advertising
Advertising

அப்போது, எஸ்ஐ குமார், கையில் வைத்திருந்த லத்தியால் வெற்றிவேல் முருகனை தாக்க முயன்றார். ஆத்திரமடைந்த வெற்றிவேல்முருகன், எஸ்ஐ குமாரின் சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளினார். பின்னர், இருவரும் சாலையிலேயே கட்டிப்புரண்டு கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதை பார்த்த வாகன ஓட்டிகள் இருவரையும் பிரித்து சமாதானம் செய்தனர். தொடர்ந்து, உதவி ஆய்வாளரை தாக்கிய வெற்றிவேல்முருகனை தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையை சேர்ந்தவர் என தெரியவந்தது. இவரது தந்தை கஜேந்திரன் காவல் துறையில் ஆயுதப்படையில் வாத்திய இசைக்குழுவில் தலைமை காவலராக இருந்து ஓய்வு ெபற்றவர் என தெரியவந்தது. இதையடுத்து உதவி ஆய்வாளரின் சீருடையை கிழித்து தகராறில் ஈடுபட்ட ஐடி நிறுவன ஊழியர் வெற்றிவேல் முருகனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: