×

தீபாவளி பண்டிகையையொட்டி பொய்கை சந்தையில் நாட்டுக்கோழி விற்பனை அமோகம் 2 ஆயிரம் வரை விற்கப்பட்டது

வேலூர், அக்.23: தீபாவளி பண்டிகையொட்டி நாட்டுக்கோழி விற்பனை பொய்கை சந்தையில் நேற்று களைக்கட்டியது. வேலூர் அருகே பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த மாட்டுச்சந்தை மிகவும் பிரபலமானதாகும். ஒவ்வொரு வாரமும் நடைபெறும் பொய்கை மாட்டுச்சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இந்நிலையில், நேற்று வழக்கம்போல் மாடுகள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. அதேபோல் நாட்டுக்கோழிகளும் அதிகளவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளதால் அனைத்து இறைச்சி விற்பனையும் களைக்கட்டும். பொதுவாக பண்டிகை நாட்களில் நாட்டுக் கோழியை விரும்பி சாப்பிடுவார்கள். இதனால் இந்த தீபாவளி சீசனுக்கு அதிக லாபத்தை கருத்தில் கொண்டு கிராமப்புறங்களில் இருந்து நாட்டுக்கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இதனால் நாட்டுக்கோழி 500 முதல் 2 ஆயிரம் வரை விற்கப்பட்டது. குறிப்பாக நகரப்புற மக்கள் நாட்டுக்கோழியை விரும்பி வாங்கி சென்றனர். இதனால் விலை சற்று அதிகமாக காணப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Diwali ,festival ,
× RELATED தீபாவளிக்கு விஜய், சூர்யா படம் ரிலீஸ்?