×

மருந்து கடைகளில் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரை வழங்க வேண்டாம்

திருவள்ளூர், அக். 23: டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல், மருந்து, மாத்திரை வழங்கக்கூடாதென மருந்துக் கடைகளுக்கு  மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் முழுவதும், டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணி நடந்து வருகிறது. வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்பார்வையில், உள்ளாட்சி அமைப்புகளும், சுகாதாரத்துறை ஊழியர்களும் இணைந்து, கொசு ஒழிப்பு பணியை மேற்கொள்கின்றனர். தலைவலி, மூட்டுவலி, களைப்பு, வாந்தி, இருமல், காய்ச்சல் வருவது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சாதாரண காய்ச்சலாக இருந்தாலும், அரசு மருத்துவமனைகளில் முறையான பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. டெங்கு காய்ச்சல் குறித்த அச்சம் பரவியிருந்தாலும், மக்களிடையே விழிப்புணர்வு போதிய அளவு ஏற்படவில்லை. சாதாரண காய்ச்சல், தலைவலி தொந்தரவு இருந்தால், அருகில் உள்ள மருந்துக் கடைகளில் மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிட துவங்குகின்றனர்.

ஒவ்வொரு கிளீனிக்கிலும் கூட்டம் அதிகமாக இருப்பதால், மருத்துவமனை பக்கம் போகாமல், மருந்து கடையுடன் சிகிச்சையை முடித்து கொள்ள முயற்சிக்கின்றனர். இதன் விளைவாக, டெங்கு காய்ச்சலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்க முடியாத நிலை உருவாகிறது. இதையடுத்து, டெங்கு தடுப்பு குறித்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மருந்துக் கடைகளுக்கும் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். கிராமப்புற மக்கள், டாக்டரின் பரிந்துரை இல்லாமலேயே, மருந்துக்கடைகளில் மாத்திரை வாங்கி சாப்பிடுகின்றனர். இது, ஆபத்தை விளைவிக்கும். எனவே, டாக்டரின் பரிந்துரை இருந்தால் மட்டுமே மருந்து, மாத்திரை வழங்க வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : doctors ,
× RELATED அடுத்த வாரம் முதல் கொரோனா...