×

அண்ணனூரில் பில்லர் பணிக்காக கால்வாய் மூடல் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீர்

அண்ணனூர், அக். 23: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணனூர், ஸ்ரீசக்தி நகரில் கால்வாய் அடைப்பால் 100 வீடுகளில் மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் குடியிருப்பாசிகள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். ஆவடி பூம்பொழில் நகர், சத்தியமூர்த்தி நகர், ஆவடி டேங்க் பேக்டரி குடியிருப்பு, நாகம்மை நகர், இ.எஸ்.ஐ அண்ணாநகர், ஜேபி எஸ்டேட், சாந்தி நகர், வி.ஜி.என் குடியிருப்பு, எம்ஜிஆர் நகர், சாந்திபுரம், நேதாஜி நகர், செந்தில் நகர், சோழம்பேடு, ரயில்வே குடியிருப்பு, ரவீந்திரன் நகர், சோழன் நகர், வைஷ்ணவி நகர், தேவி நகர், ஸ்ரீ தேவி வைஷ்ணவி நகர், சிவசக்தி நகர், அண்ணனூர் 60 அடி சாலை, 40 அடி சாலை, ஸ்ரீசக்தி நகர் வழியாக அண்ணனூர் ரயில்வே கேட் அருகில் தண்டவாளத்தை கடந்து அம்பத்தூர் ஏரி சென்றடைகிறது. இவ்வாறு பல ஆண்டாக ஒவ்வொரு மழைக்காலத்திலும் மேற்கண்ட பகுதிகளில் இருந்து பல கிலோ மீட்டர் கடந்து மழைநீர், கால்வாய் வழியாக அம்பத்தூர் ஏரிக்கு வருகிறது. தற்போது கிடப்பில் கிடந்த அண்ணனூர் ரயில்வே மேம்பால பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்கான மேம்பாலம் மற்றும் சாலை பணிகள் அண்ணனூர் ரயில்வே கேட் அருகில் நடைபெற்று வருகிறது. இதற்காக, நடைபெறும் ‘பில்லர்’ அமைக்கும் பணிகளால் தொல்காப்பியன் தெருவில் உள்ள மழைநீர் கால்வாய் அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் தண்ணீர் கால்வாய் வழியாக அம்பத்தூர் ஏரிக்கு செல்வது தடைபடுகிறது.

இதன் காரணமாக ஸ்ரீ சக்தி நகர் பகுதியில் உள்ள நடேசன் தெரு, அண்ணா தெரு, ராமாயணம் தெரு ஆகிய தெருக்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘அண்ணனூர் தண்டவாள பகுதியில் ரயில்வே மேம்பாலம் பணி முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதற்குரிய இணைப்பு சாலை மற்றும் மேம்பால பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியால் ஸ்ரீசக்தி நகர் பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய் செல்லும் பாதை அடைக்கப்பட்டுள்ளது. இதனால், மழைநீர் செல்ல முடியாமல் ஸ்ரீ சக்தி நகர் பகுதியில் உள்ள தெருக்களில் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளை சூழ்ந்து தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும், 20க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் உள்ளே புகுந்து உள்ளது. இதனால் குடியிருப்புவாசிகள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் உள்ளேயே தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், தண்ணீர் புகுந்த வீடுகளில் குடியிருப்புவாசுகள் கட்டிலில் அமர்ந்து உள்ளனர். இதனால் முதியோர் முதல் சிறுவர்கள் வரை மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும், மழை நீருடன் கழிவுநீரும் ஆங்காங்கே தெருக்களில் கலந்து நிற்கிறது. இதனால் தெருக்களில் பாதசாரிகள் நடமாட முடியவில்லை.

இதோடு மட்டுமல்லாமல் அங்கு தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் குப்பைகளை அகற்ற ஊழியர்கள் வருவதில்லை. இதனால், வீடுகளை சூழ்ந்த மழைநீருடன் குப்பைகளும் தேங்கி கிடக்கின்றன. மேலும்,  தெருக்களில் கழிவுநீர் கலந்து இருப்பதால் துர்நாற்றம் வீசுகின்றன. இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், தெருக்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். பாதசாரிகள் அறவே நடமாட முடியவில்லை. இதனால் ஒட்டு மொத்தத்தில் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில நெடுஞ்சாலை துறைக்கும், ஆவடி மாநகராட்சி நிர்வாகத்திற்கும் புகார்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் ஸ்ரீ சக்திநகர் குடியிருப்புவாசிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
எனவே, இனிமேலாவது சம்பந்தப்பட்ட துறையினர் ஸ்ரீசக்தி நகர் பகுதியில் குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்தவும், அடைக்கப்பட்ட கால்வாயை உடனடியாக சீரமைத்து மழைநீர் செல்ல வழிவகை செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்’’ என்றனர்.

Tags : canal closure homes ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு