×

வேங்கீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 500 கோடி மதிப்புள்ள சொத்து மாயம்

சென்னை, அக்.23: வடபழனி வேங்கீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி, மாயமானதாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. வடபழனியில் உள்ள வேங்கீஸ்வரர் கோயில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இக்கோயிலுக்கு சொந்தமாக வடபழனி, விருகம்பாக்கம், மாம்பலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு, கடைகள், நிலங்கள் உள்ளன. இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் கோயில் வளர்ச்சிப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கோயில் கடந்த 80 ஆண்டுகளாக பரம்பரை அறங்காவலரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இவர்கள், சென்னை மாநகரின் பிரதான பகுதியில் உள்ள கோயிலுக்கு சொந்தமான நிலங்களை முறைகேடாக விற்பனை செய்தாக அறநிலையத்துறைக்கு கடந்த 2013ல் ஏராளமான புகார்கள் வந்தன. அதன்பேரில் கடந்த 2016ல் அறநிலையத்துறை இணை ஆணையர் இதுகுறித்து ஆய்வு செய்தார். அப்போது கோயில் நிர்வாக பணிகளில் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, அந்த கோயிலில் நிர்வாக பணி தற்ேபாது வடபழனி ேகாயில் துணை ஆணையர் சித்ரா தேவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து இந்து தமிழர் கட்சி தலைவர் ரவிக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வடபழனியில் வேங்கீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக 3 ஏக்கர் 97 சென்ட்டில் தெப்பக்குளம் இருந்தது. தற்போது அந்த குளம் காணாமல் போய் விட்டது. அந்த தெப்பக்குளம் இருந்ததற்கான ஆதாரங்கள் அரசின் பதிவேட்டில் மட்டுமே உள்ளது. ஆனால், தற்போது தெப்பக்குளம் இல்லை. அந்த தெப்பக்குளம் முழுமையாக மூடிமறைக்கப்பட்டு, அங்கு கட்டிடங்களாக காட்சியளிக்கிறது. விருகம்பாக்கத்தில் 1 ஏக்கர் 35 சென்ட் நிலம் ஒரு வருடத்துக்கு 2 ஆயிரம்தான் கோயில் நிர்வாகம் குத்தகைக்கு விட்டுள்ளது. தற்போது வரை இந்த தொகைதான் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால், கோயில் நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், ஆளும்கட்சியை சேர்ந்த முக்கியப்புள்ளி உட்பட 20 பேர் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கோயில் நிர்வாகத்தின் துணையுடன்தான் இந்த நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ள சொத்து மதிப்பு மட்டும் 500 கோடிக்கும் மேல் இருக்கும். அதே நேரத்தில், கோயிலுக்கு சொந்தமான குடியிருப்புகளில் வசித்து வருவோர்களில் பலர் முறையாக வாடகை செலுத்தாமல் உள்ளனர். தற்போது கோயில் நிர்வாகம் அறநிலையத்துறை வசம் வந்துள்ளது. இந்த துறை சார்பில் வாடகை செலுத்தாதவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும். ஏற்கனவே, நிலுவையில் உள்ள வழக்குகளை துரிதமாக முடிக்க வேண்டும். கோயில் நிலங்ளை மீட்க அறநிலையத்துறை சார்பில் நேர்மையான விசாரணை நடத்த ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்