×

பொன்னேரி அருகே கால்வாய் ஆக்கிரமிப்பால் 300 ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கியது

பொன்னேரி, அக். 23: பொன்னேரி அருகே கால்வாய் ஆக்கிரமிப்பால் 300 ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கியது. பொன்னேரி அடுத்த மடிமைகண்டிகை, வீரங்கிமேடு ஆகிய கிராமங்களில் சுமார் 500 ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். அண்மையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. 2 நாள் மழைக்கே நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. அகரம், லட்சுமிபுரம், தேவராஞ்சேரி, ஏருசிவன், மத்ராவேடு, அரவாக்கம் ஆகிய 6 கிராமங்களில் இருந்து வெளியேறும் மழைநீர், கால்வாய் வழியாக மடிமைகண்டிகை வந்து பெரும்பேடு ஏரிக்கு செல்ல வேண்டும்.

இந்த ஏரிக்கு செல்லும் வரத்து கால்வாய், தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் 6 கிராமங்களின் விளைநிலங்களில் இருந்து வழிந்தோடும் மழைநீர், பெரும்பேடு ஏரிக்கு செல்லாமல், மடிமைகண்டிகை, வீரங்கிமேடு கிராமங்களின் விளைநிலங்களை மூழ்கடிக்கிறது. மேலும் மடிமைகண்டிகை மற்றும் வீரங்கிமேடு கிராமங்களின் விளைநிலங்களை ஒட்டியுள்ள மழைநீர் கால்வாய் தூர்ந்தும், ஆக்கிரமிக்கப்பட்டும் கிடப்பதால் மடிமைகண்டிகை மற்றும் வீரங்கிமேடு கிராமங்களின் விளைநிலங்களில் தேங்கும் மழைநீர் வெளியேற வழியில்லை. நடவு செய்து 40 நாட்களே ஆன நிலையில் 300 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் முற்றிலுமாக மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் பல லட்சம் செலவு செய்த பணம் வீணாகி போனதே என்று கண்ணீர் விட்டு அழுததை பார்க்க முடிந்தது.

Tags : paddy fields ,Ponneri ,
× RELATED இடியுடன் விடிய விடிய பலத்த மழை: 8,500...