×

பெத்தநாயகன்பேட்டை கிராம பஸ் நிறுத்தத்தில் திறந்த வெளி பாரான பயணிகள் நிழற்குடை

ஊத்துக்கோட்டை, அக். 23:  கிளம்பாக்கம் ஊராட்சி பெத்தநாயகன்பேட்டை கிராமத்தில், பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்குடை புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், விஷப்பூச்சிகள் உலா வருகின்றன. மேலும், அதை திறந்த வெளி பாராக குடிமகன்கள் பயன்படுத்துவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பெரியபாளையம் அருகே கிளாம்பாக்கம் ஊராட்சியில் பெத்தநாயகன்பேட்டை  கிராமம் உள்ளது.  இங்கு, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.  இந்த  கிராமத்தை  சேர்ந்த மக்கள் கன்னிகைப்பேர் - வெங்கல் சாலையில் உள்ள  பெத்தநாயகன்பேட்டை பேருந்து நிறுத்தத்திற்கு  வந்து அங்கிருந்து, கன்னிகைப்பேர், வெங்கல்  ஆகிய பகுதிகளுக்கு பேருந்தில்  செல்கின்றனர். அங்கிருந்து திருவள்ளூர், சென்னை செங்குன்றம்   மற்றும் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் ஆகிய பகுதிகளுக்கும்  செல்கின்றனர்.

இந்நிலையில். பெத்தநாயகன்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையை சுற்றிலும் செடி, கொடிகள் படர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் காணப்படுகிறது. இதனால், பயணிகள் பேருந்து நிறுத்தத்தில் உள்ள நிழற்குடைக்கு செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே, பேருந்து நிறுத்தத்தை சுற்றியுள்ள செடி, கொடிகளை அகற்ற  வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பெத்தநாயகன்பேட்டை பஸ் நிறுத்தம் செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால், மர்ம நபர்கள்  சிலர் இந்த பேருந்து நிறுத்தத்திலேயே , இரவு பகல் என்றும் பாராமல் மது அருந்தி அந்த பேருந்து நிறுத்தத்தை பாராக மாற்றி விட்டார்கள். எனவே,  சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து நிறுத்தத்தில் படர்ந்துள்ள செடி கொடிகளை அகற்ற வேண்டும் என கூறினர்.

Tags : Travelers ,
× RELATED உகாண்டாவில் பயங்கரம்: 2 வெளிநாட்டு பயணிகள் சுட்டு கொலை