×

நலத்திட்ட உதவிகள் கிடைக்காததால் சாதி சான்றிதழ் கேட்டு இருளர் இன மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

செங்கல்பட்டு, அக்.23: அனைவருக்கும் சாதிச்சான்று, குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் செங்கல்பட்டு வட்டாட்சியர்  அலுவலகத்தை முற்றுகையிட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டத்துக்கு உட்பட்ட  அனுமந்தபுத்தேரி, ஒழலூர், கல்வாய், கருநிலம், காயரம்பேடு, பாண்டூர், நின்னகாட்டூர், நல்லம்பாக்கம், அருந்ததி பாளையம், சட்டமங்கலம், மேட்டுப்பாளையம், ஊனமாஞ்சேரி, அஞ்சூர், குண்ணவாக்கம், திருக்கச்சூர், கூடுவாஞ்சேரி, காரனைக்காட்டூர், ரெட்டிபாளையம் கிராமங்களில்  ஏராளமான இருளர்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு குடிமனை பட்டா, சாதி சான்றிதழ் வழங்காததால் அரசின் நலத் திட்டங்களான தொகுப்பு வீடு, மின்சாரம், ரேஷன் கார்டு உள்ளிட்டவை பெறமுடியாமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், ஆட்சேபணைக்குறிய புறம்போக்கு நிலங்களில் வாழும் இருளர் இன மக்களுக்கு, மாற்று இடத்தில் பட்டா வழங்க வேண்டும்.  இருளர் மக்கள் அனைவருக்கும் தரமான தொகுப்பு வீடுகளை அரசே கட்டித்தர வேண்டும்.

சாதிச் சான்று கேட்டு மனு கொடுத்துள்ள அனைவருக்கும் விரைவாக சாதிச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு  கோரிக்கைகளை  வலியுறுத்தி  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், இருளர் மக்கள் சங்கம், பழங்குடி மக்கள் விடுதலை இயக்கம், இருளர் முன்னேற்ற நலவாழ்வு சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பழங்குடி மக்கள் விடுதலை இயக்க செயலாளர் ராணி தலைமை வகித்தார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட தலைவர் அழகேசன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் மோகனன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சண்முகம், இருளர் மக்கள் சங்க செயலாளர் பாலாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதி செயலாளர் கே.வேலன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொது செயலாளர் இரா.சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சங்க நிர்வாகிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றனர். வட்டாட்சியர் அலுவலகத்தில் இல்லாததால் ஆத்திரமடைந்த இருளர் இன மக்கள், வட்டாட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் சரவணன், சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். மேலும், அதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED ஏரிகளில் நீர் இருப்பு, கடல்நீரை...