×

மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகே பல மாதங்களாக குழாய் இல்லாமல் காட்சி பொருளாக உள்ள தண்ணீர் தொட்டி

மாமல்லபுரம், அக்.23: மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள குழாய் இல்லாமல் பல மாதங்களாக காட்சி பொருளாக இருக்கும் தண்ணீர் தொட்டியில், குழாய் அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் மாமல்லபுரத்துக்கு தினமும் உள்நாடு, வெளிநாடு, வெளிமாநிலம் என பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள புராதன சின்னங்களான வெண்ணய் உருண்டை கல், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்வைகளை பார்வையிட்டு புகைப்படம் எடுப்பதும், செல்போனில் செல்பி எடுப்பதுமாக உள்ளனர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகே, பல மாதங்களுக்கு முன், ஒரு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதில் குழாய் பொருத்தவில்லை. இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல், சிரமப்படுகின்றனர். பணம் கொடுத்து அருகில் உள்ள கடைகளில் பாட்டில்களில் தண்ணீர் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் கடந்த  வாரம் மாமல்லபுரம் வந்து சென்றனர். அவர்கள் வருகையையொட்டி நகரம் முழுவதும் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு, மின்விளக்கு அலங்காரத்தில் புராதன சின்னங்கள் ஜொலித்தது. இதனை டி.வியில் பார்த்தும் நாளிதழ்களில் படித்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் மாமல்லபுரம் வருகின்றனர்.

அவர்கள் புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து விட்டு பஸ் நிலையம் அருகே உள்ள தொட்டியில் தண்ணீர் குடிக்க செல்கின்றனர். ஆனால் அதில் குழாய் இல்லாமல் இருப்பதை பார்த்து வேதனைுடன் திரும்பி செல்கின்றனர். இதுபற்றி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், கண்டும் காணாமல் உள்ளனர்.எனவே சுற்றுலாப் பயணிகள் , பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பஸ் நிலையம் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் குழாய் பொருத்தி, தாகத்தை தீர்க்க வேண்டும் என்றனர்.

Tags : bus station ,Mamallapuram ,
× RELATED தமிழகத்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா? நெய்யாற்றின்கரை பஸ் நிலையம் மூடல்