×

திருச்சியை பதற்றத்திற்குள்ளாக்கிய செயின் பறிப்பு ஆசாமிகள் இரவில் 2 மணி நேரம் வலம் வந்து அட்டகாசம்

திருச்சி, அக்.18: திருச்சி மாநகரில் காவல்துறை சார்பிலும், வர்த்தக நிறுவனங்கள் சார்பிலும் ஆங்காங்கே கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையிலும், தினமும் செயின் பறிப்பு சம்பவங்கள் குறையவில்லை. நகரில் பைக்கில் வந்து செயின் பறிக்கும் கும்பல் தினமும் கைவரிசை காட்டிக்கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி இரவு 9 மணி முதல் 11 மணி வரை திருச்சி மாநகரையே ஒரு வழிப்பறி கும்பல் பரபரப்புக்குள்ளாக்கியது. மக்கள் நடமாட்டம் மிகுந்த தில்லைநகரில் இரவு 9 மணிக்கு 3 பேர் ஒரே பைக்கில் வந்தனர். பைக் ஓட்டியவர் ஹெல்மட் அணிந்திருந்தார் மற்றவர்கள் ஹெல்மட் அணியவில்லை. இவர்கள் தனியாக செல்லும் பெண்களிடம் தில்லைநகரில் 9 மணிக்கே செயின் பறிக்க முயன்றனர். பெண்கள் கூச்சல் போட்டதால் செயினை பறிக்காமல் தப்பினர். பின்னர் தில்லைநகரில் இருந்து உழவர்சந்தை மைதானம் வழியாக திருச்சி ஜி.ஹெச் சாலைக்கு வந்து அங்கும் 2 பெண்களிடம் செயின் பறிக்க முயன்றனர். அவர்களும் கூச்சல் போட்டதால் அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்கள் உஷாரானதால் செயினை பறிக்காமல் உறையூர் பகுதிக்கு சென்றனர்.

அங்கும் 2 பெண்களிடம் செயினை பறிக்க முயன்றனர். அந்த முயற்சியும் கைகூடாததால் மீண்டும் தில்லைநகர் வந்தனர். அங்கு செல்போன் பேசியபடி சென்ற 3 பேரிடம் விலை உயர்ந்த செல்போன்களை பறித்தனர். மீண்டும் அவர்கள் கோர்ட் அருகே உள்ள உய்யகொண்டான் ஆற்றங்கரை வந்து அங்கிருந்து குழுமணி செல்லும் ரோட்டில் புகுந்து தீரன் நகர் வழியாக தப்பி சென்றனர். அன்றைய தினம் இரவு 11 மணி வரை அவர்கள் இந்த அட்டகாசத்தில் ஈடுபட்டும் யாரும் அந்த கொள்ளையர்களை பிடிக்கவில்லை. கடைசியாக போலீசாருக்கு தகவல் தெரிந்து குழுமணி ரோட்டில் விரட்டினர். ஆனாலும் கொள்ளையர்கள் தப்பிவிட்டனர். அவர்கள் வந்த பைக் எண்ணை கண்டுபிடிக்க ஆங்காங்கே உள்ள கண்காணிப்பு காமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.  அத்தனை காமிராக்களும் கோளாறு ஏற்பட்டு கொள்ளையர்களை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பாதுகாப்பு நிறைந்த மாநகரிலேயே ஒரு கொள்ளைக்கும்பல் சுற்றி சுற்றி வந்து வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Tags : Chain flush azamis ,Trichy ,
× RELATED திருச்சியில் போலி மது பாட்டில்கள் பறிமுதல்..!!