×

வையம்பட்டி அருகே அகற்றப்படாத மருத்துவ கழிவுகள் கலந்த குப்பை மலை நோய் தொற்று அபாயம்: பொதுமக்கள் அச்சம்

மணப்பாறை, அக்.18: மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவுகளோடு, மருத்துவ கழிவுகளும் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதோடு, நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.மணப்பாறையை அடுத்த வையம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியிலிருந்து வைரம்பட்டிக்கு செல்லும் சாலையின் அருகே குப்பை கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்த கழிவுகளால் துர்நாற்றம் ஏற்படுவதுடன், கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் கழிவுநீரோடு மழைநீரும் கலந்து சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அருகில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கும் அங்கன்வாடியிலிருக்கும் குழந்தைகளுக்கும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர்.

குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளில் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் சில மருத்துவ கழிவுகளும் கொட்டப்படும் அவலமும் ஏற்பட்டுள்ளது. இந்த குப்பை கழிவுகளை அகற்ற அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் அளித்தும், பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். மேலும் அனைத்து துறை அதிகாரிகளை கொண்டு குப்பைகளை அகற்றுவதற்காக இரண்டு முறை அமைதி பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு, அதில் குப்பை கழிவுகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அகற்றப்படாமல் கிடக்கும் குப்பை கழிவுகளில் மருத்துவ கழிவுகளும் கிடக்கிறது. மேலும் குப்பைகள் பகுதியில் தேங்கி நிற்கும் நீரில் கொசுக்கள் அதிகளவில் உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பையை அகற்றவும், அதில் மருத்துவ கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வைரம்பட்டி பகுதி மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Vaiyampatti ,
× RELATED மழையால் நிரம்பிய கண்மாய் கரைகள் உடையும் அபாயம்