ஆத்தூர் அருகே டூவீலர்கள் மோதல் குற்றுயிராக கிடந்தவரை தாக்கிய கொடூரம்

ஆத்தூர், அக்.18: தலைவாசல் அருகே, ஆறகளூர் சித்தேரி பள்ளக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வடிவேல்(32). இவர், கடந்த 11ம் தேதி இரவு ஆறகளூர் நோக்கி டூவீலரில் வந்து கொண்டிருந்தார். இதேபோல், எதிரே மற்றொரு டூவீலரில் கோவிந்தம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை(35) மற்றும் அவரது நண்பர் முருகன் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். இருவாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், வடிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த சின்னதுரை, முருகன் ஆகியோர் மயங்கிய நிலையில் சாலையில் கிடந்தனர். இதனைக்கண்டு அந்த வழியாக சென்றவர்கள் தலைவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விபத்தில், வடிவேல் பலியானது குறித்து தகவலறிந்து வந்த அவரது உறவினர்கள், சின்னதுரை மற்றும் முருகன் ஆகியோர் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல், அவர்களை சரமாரியாக தாக்கினர். இதனை அங்கிருந்த சிலர் தங்களின் செல்போனில் வீடியோ எடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி, கடந்த 14ம் தேதி சின்னதுரை உயிரிழந்தார். முருகனுக்கு தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 இந்நிலையில், விபத்தில் சிக்கி குற்றுயிராக கிடந்த சின்னதுரை, முருகனை விபத்துக்கு காரணமானவர் என கூறி, போலீசாரின் முன்னிலையிலேயே வடிவேலின் உறவினர்கள் பலமாக தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதனை ஆதாரமாக வைத்து, வடிவேலின் உறவினர்கள் தாக்கியதாலேயே சின்னதுரை உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தலைவாசல் போலீசார் கூறுகையில், ‘குடிபோதையில் ஓட்டி வந்ததால், டூவீலர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட மற்ற இருவரும் குடிபோதையில் மயங்கி கிடந்தனர். அவர்களை வடிவேலின் உறவினர்கள் தாக்கியதை தடுத்து, இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். சிகிச்சை பலனின்றி சின்னதுரை உயிரிழந்துள்ளார். ஆனால், வடிவேலின் உறவினர்கள் தாக்கியதால் தான் சின்னதுரை உயிரிழந்ததாக, அவரது உறவினர்கள் தகவல் பரப்பி வருகிறார்கள். பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்ததும், உரிய முறையில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.

Related Stories: