உயரழுத்த மின்சாரத்தால் மின் சாதனங்கள் சேதம்

ஆட்டையாம்பட்டி, அக்.18:  .ஆட்டையாம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 12வது வார்டு பகுதியில் மேட்டுப்பட்டி வீதி, மேட்டுக்காடு உள்ளிட்ட தெருக்களில் 75 வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.  இங்கு கடந்த 3 ஆண்டுக்கு முன்பு மின்சாரத்தை தடையின்றி கொடுக்க டிரான்ஸ்பார்மர் புதியதாக அமைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் வீட்டின் மேல் சென்ற உயரழுத்த மின் கம்பியை மாற்றி புதிதாக மின் கம்பம் அமைத்துள்ளனர். இந்த மின் கம்பத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு மின்கசிவு காரணமாக தீப்பொறி எழுந்துள்ளது. இதனை அறிந்த மின்சார ஊழியர்கள் இரவோடு இரவாக அப்பகுதிக்கு விரைந்து சென்று சரி செய்தனர் . இதையடுத்து, ஒரு சில மணி நேரத்தில் உயரழுத்த மின் சப்ளையால் வீடுகளில் உள்ள டி.வி.பெட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் பழுதடைந்தது. இதில், ராசாத்தி அம்மாள் என்பவரது வீட்டில் இரண்டு டிவி, மின் விசிறி, 4 ட்யூப் லைட்டுகள் உள்ளிட்ட  ₹50 ஆயிரம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் சேதமடைந்தது. மேலும், அதே பகுதியைச் சேர்ந்த பாரதி, வெண்ணிலா, சுப்பிரமணி உள்ளிட்டோர் வீடுகளிலும் டிவி, மின் விசிறி, ட்யூப் லைட்டுகள், ஏசி உள்ளிட்டவை சேதமடைந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், புதியதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் சரிவர இயங்கவில்லை. அதுமட்டுமின்றி புதிதாக அமைக்கப்பட்ட மின் கம்பத்திலும் அடிக்கடி மின்கசிவால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, மின்சார வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வரும் மழைக்காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் தொடர்ந்தால் பொதுமக்கள் ஓன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்

Related Stories: