×

மோகனூர் காவிரியில் தொடரும் மணல் கொள்ளை போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் குவியும் கடத்தல் வாகனங்கள்

நாமக்கல், அக்.18: மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து தினமும் சரக்கு ஆட்டோ, மாட்டு வண்டி, இருசக்கர வாகனங்களில் மணல் கடத்தப்படுகிறது. காவிரி கரையோர கிராமங்களில், மணல் திருட்டு குடிசை தொழில் போல நடந்து வருகிறது. மணல் கடத்தலை தடுக்க முடியாமல், வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் திணறி வருகிறார்கள். வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிந்தே மணல் கடத்தல் நடப்பதால், உள்ளூர் அதிகாரிகள், பெயரளவுக்கு வாரத்துக்கு ஒரு திருட்டு மணல் வண்டியை பிடித்து, வழக்கு போட்டு, கணக்கு காட்டி விடுகிறார்கள்.  இப்படி பெயரளவுக்கு கணக்கு காட்டப்பட்ட மணல் கடத்தல் வாகனங்களால், மோகனூர் போலீஸ் குடியிருப்பு வளாகம் நிரம்பி வழிகிறது.
 மேலும், அந்த வளாகம் முழுவதும் கடத்தி வரப்பட்ட மணலை, போலீசார் கொட்டி வைத்துள்ளனர். மணல் கடத்தி வரும் போது பிடிபடும் வாகனம் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த வாகனத்தை பறிமுதல் செய்து விடுகிறார்கள். பின்னர், நீதிமன்றம் மூலம் வாகனத்தை அதன் உரிமையாளர் மீட்டுக்கொள்ள வேண்டும். இதற்கு பல மாதங்கள், ஆண்டுகள் ஆவதால், மோகனூர் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தப்பட்ட மணல் கடத்தல் வாகனங்கள் சேதமடைய தொடங்கி விட்டன. அதில் உள்ள மணலும் வளாகம் முழுவதும் நிரம்பி கிடக்கிறது.

 இது குறித்து மோகனூர் இன்ஸ்பெக்டர் சுகுமார் கூறுகையில்,  ‘பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் மணல் கடத்தல் நடைபெறுகிறது. இரவு நேரங்களில் மணல் கொள்ளையர்கள் தாறுமாறாக வாகனங்களை ஓட்டி செல்கிறார்கள். இதனால் அவர்களை பின் தொடர்ந்தும், விரட்டியும் தான் பிடிக்க வேண்டியுள்ளது. அப்படியும் சில சந்தர்ப்பங்களில், வாகனத்தை நிறுத்தி விட்டு ஓடி விடுவார்கள். வாகனங்களின் பதிவு எண்ணை வைத்து உரிமையாளரை கண்டுபிடித்து, நீதிமன்றங்களில் வழக்கு போடுகிறோம். நான் மோகனூர் வந்த பிறகு, 50க்கும் மேற்பட்ட மணல் கடத்தல் லாரிகளை பிடித்துள்ளேன். மணல் கடத்தல் தடுப்பு வேட்டை தொடர்ந்து நடைபெறும்,’ என்றார். இதுகுறித்து மோகனூர் தாசில்தார் ராஜேஷ்கண்ணன் கூறுகையில்,  ‘மணல் கடத்தல் வாகனங்களை வருவாய்த் துறையினர் பிடித்தால், அந்த வாகனத்துக்கு அபராதம் விதிக்கும்படி ஆர்டிஓவிடம் பரிந்துரை செய்வோம். அபராதம் செலுத்தி விட்டு வாகனத்தை மீட்டு கொள்ளலாம். இப்போது அப்படி இல்லை. நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தி தான் வாகனத்தை மீட்க முடியும். வருவாய்த்துறையினர் பிடிக்கும் வாகனங்களை உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைத்து விடுவோம். அவர்கள் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்துக்கு அறிக்கை அனுப்பி விடுவார்கள். மணல் கடத்தல் தினமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது,’ என்றார்.

 காவிரி ஆற்றில் இருந்து திருடப்படும் மணலை, உள்ளூர் நபர்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு படைத்தவர்கள் தங்களது பட்டா நிலங்களில் கொட்டி வைத்து காய வைத்த பிறகு தான், விற்பனைக்கு அனுப்புகிறார்கள். பட்டா நிலங்களில் தேவையில்லாமல் மணல் கொட்டி வைப்பவர்கள் மீது உள்ளூர் வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்தால் மணல் கடத்தலை எளிதாக தடுக்க முடியும். ஆனால்,  அதை யாரும் செய்வதில்லை. கிராமங்களில் இருந்து மணல் கடத்தி வரும் லாரிகளை கண்காணிக்க, சிசிடிவி கேமராக்களை பொறுத்தவேண்டும் என மோகனூரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Mohanur Kavri ,Sand Burglary Police Complex ,
× RELATED சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு