×

மாவட்டம் முழுவதும் இடி, மின்னல் அதிகமாக இருக்கும்

நாமக்கல், அக்.18: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், நாமக்கல் மாவட்டம் முழுவதும் இடி, மின்னல் அதிகமாக இருக்கும் என கால்நடை கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் செயல்பட்டு வரும், கால்நடை தீவன பகுப்பாய்வு மற்றும் தரஉறுதி ஆய்வு மையத்தில், நேற்று வடகிழக்கு பருவமழை குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர் மோகன் பேசியதாவது:வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே துவங்கி விட்டது. நாமக்கல் மாவட்டத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் 360 மில்லி மீட்டர் மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. வரும் 10 முதல் 15 நாட்களில் மின்னல், இடி தாக்கம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக சிறு கால்நடைகளின் இறப்பு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இதை தடுக்க விவசாயிகள் மதியத்துக்கு பிறகு வெள்ளாடு, செம்மறி ஆடுகளை கொட்டகையில் அடைத்து விட வேண்டும். மரத்தடியில் ஆடுகளை மேய விடக்கூடாது. மழைநீரை சேமிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை பயன்படுத்தி, விவசாயிகள் 4 மாத பயிரான சோளத்தை விதைக்கவேண்டும். ஒரு ஏக்கரில் சோளம் விதைத்தால், அதில்  கிடைக்கும் சோள தட்டுகளை 2 ஆண்டுகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் மரத்தீவன பயிர்களையும் அதிகம் பயிரிடலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 நிகழ்ச்சியில், கால்நடை தீவன பகுப்பாய்வு திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் பேசுகையில், ‘வடகிழக்கு பருவமழை நாமக்கல் மாவட்டத்தில் இயல்பைவிட அதிகமாக இருக்கும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை உள்ள நாட்களில் 23 நாட்களில் மட்டும் 360 மில்லிமீட்டர் வரை கிடைக்கும். மழையின் அளவு தற்போது மாறுபடுகிறது. இதுகுறித்து விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையில், அனைத்து வட்டாரத்திலும் மழை மானி கருவி வைக்கப்பட்டுள்ளது,’ என்றார்.
வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் அகிலா பேசுகையில், ‘வடகிழக்கு பருவமழையை பயன்படுத்தி விவசாயிகள் சின்ன வெங்காயம் அதிகம் பயிரிடலாம்,’ என்றார். நிகழ்ச்சியில், கால்நடை தீவன பகுப்பாய்வு உதவி பேராசிரியர் கவிதா, கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய விரிவாக்கத்துறை தலைவர் நர்மதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : thunder ,district ,
× RELATED இடி, மின்னலின் போது டிவி, மொபைல்...