×

மாவட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தென்மேற்கு பருவமழை சராசரியை விட அதிகரிப்பு

தர்மபுரி, அக்.18: தர்மபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென்மேற்கு பருவமழை 400 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு சராசரியைவிட 39 மி.மீ. அதிகம் பெய்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் ஏரி, குளம், கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டன. நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றது. பயிர் சாகுபடி பரப்பும் வெகுவாக சரிந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்த தென்மேற்கு பருவமழை, ஓரளவு தர்மபுரி மாவட்டத்திற்கு கைகொடுத்துள்ளது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழையின் சராசரி மழையளவு அதிகரித்துள்ளது.  மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 853.01 மில்லி மீட்டர். இதுவரை 539 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழையின் சராசரி அளவு 361 மிமீ. ஜூன் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை, மொத்தம் 400 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வழக்கத்தை காட்டிலும் 39 மில்லி மீட்டர் கூடுதலாக பெய்துள்ளது. கடந்த 4 ஆண்டிற்கு பிறகு, தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது. இந்த மழையால் தூர்வாரப்பட்ட ஏரி, குளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

இதனிடையே, வடகிழக்கு பருவமழை 17ம் தேதி தொடங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால், ஒருநாள் முன்னதாகவே தொடங்கியது. இதில், 15.40 மில்லி மீட்டர் சராசரி மழையளவு கிடைத்தது. இனி பெய்யக்கூடிய வடகிழக்கு பருவமழை கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதம் வரை பெய்யும். வடகிழக்கு பருவமழையின் சராசரி அளவு 316 மில்லி மீட்டர் ஆகும். நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் மழை தொடங்கியது. இதில், அரூர்- 43 மில்லி மீட்டர், தர்மபுரி 38 மி.மீ, பென்னாகரம்- 18மி.மீ, பாப்பிரெட்டிப்பட்டி- 5.6 மி.மீ, ஒகேனக்கல்-1.2 மி.மீ, பாலக்கோடு- 2 மி.மீ என மொத்தம்- 107.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.  இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 853.01 மில்லி மீட்டரில், இதுவரை 539 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை 39 மிமீ கூடுதலாக பெய்துள்ளது. மாவட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு, தென்மேற்கு பருவமழை முழுமையாக கைகொடுத்துள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,’ என்றனர்.

Tags : district ,
× RELATED தென்மேற்கு பருவமழையால் கொப்பரை உற்பத்தி பாதிப்பு