30அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தம்

தர்மபுரி, அக்.18: தர்மபுரியில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் கடை பணியாளர்கள் சார்பில், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தினர்.தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு அரசு நியாய நிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில், நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குமார் வரவேற்றார். மாநில செயற்கு உறுப்பினர் தனசேகரன் சிறப்புரையாற்றினார். மாநில பிரசார செயலாளர் சுகமதி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு சிவில் சப்ளை பணியாளர்களுக்கு இணையான ஊதியத்தை, நியாய விலை கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நியாயவிலை பொருட்கள் வழங்குவதற்கென தனி துறை ஏற்படுத்த வேண்டும். அனைத்து பொருட்களையும் சரியான எடையில் வழங்க வேண்டும். பொட்டல முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 30அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொருளாளர்  ஜான்ஜோசப், முருகேசன், அசோகன், சாரதி, சிவகுமார், சேனாதிபதி, சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : ration shop employees ,identification strike ,
× RELATED ரேஷன் கடை ஊழியர்கள் 11ம் தேதி வேலை நிறுத்தம்