×

19 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டி தீர்த்த தென்மேற்கு பருவமழை சராசரியை விட 169 சதவீதம் அதிகம் பொழிவு பராமரிப்பு இல்லாததால் வறண்டு கிடக்கும் நீர்நிலைகள்

விருதுநகர், அக்.18: விருதுநகர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை 19 ஆண்டுகளில் இல்லாத வகையில் சராசரியை விட அதிக அளவில் பெய்தும் கண்மாய்கள், அணைகளில் தண்ணீரில்லை. எனவே வடகிழக்கு பருவமழையை சேமிக்க வழி செய்ய வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.விருதுநகர் மாவட்டத்தில் 7 அணைகள், 1040 கண்மாய்கள், 1260 குளங்கள், 33,360 கிணறுகள் இருக்கின்றன. இவற்றை நம்பி 1.50 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்கள் இருந்த நிலையில் மழையின்மை, வறட்சி, பருவம் தவறி பெய்த மழை, வேலையாட்கள் பற்றாக்குறையால், பூச்சி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாய பரப்பளவு 90 ஆயிரம் ஹெக்டேருக்கும் கீழ் குறைந்துவிட்டது. மாவட்டத்தில் சராசரி மழையவு 820.1 மி.மீ. இதில் ஜனவரி, பிப்ரவரி குளிர்காலத்தில் 42.80 மி.மீ., மார்ச் முதல் மே வரையிலான கோடையில் 161.5 மி.மீ, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில் 196.8 மி.மீ, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் 419 மி.மீ மழை பெய்ய வேண்டும்.மாவட்டத்தில் நடப்பாண்டில் குளிர்காலத்தில் 11.53 மி.மீ, கோடையில் 100.50 மி.மீ மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய 196.8 மி.மீ பதிலாக கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 333.55 மி.மீ மழை பதிவாகி உள்ளது. 2001 முதல் 2018ம் ஆண்டு வரை எந்த ஆண்டும் இந்த அளவிலான மழை பதிவாகவில்லை. இந்தாண்டு சராசரியை விட 169.49 சதவீதம் அதிகம் மழை பதிவாகி உள்ளது. 19 ஆண்டுகளில் இல்லாத வகையில் சராசரியை விட அதிக அளவில் மழை பெய்தும் மாவட்டத்தில் உள்ள அணைகள், கண்மாய்களில் தண்ணீரில்லை. நீர் நிலைகள், வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் தண்ணீர் வந்து சேரவில்லை.

கண்மாய்களுக்கான நீர் வரத்து பாதைகள் அடைப்பு, கண்மாய்களில் அதிகப்படியான மண் அள்ளியதால் மழைநீர் குழிகளில் தேங்கி விவசாயத்திற்கு பயனற்ற வகையில் உள்ளது. வடகிழக்கு பருவமழை பெய்ய துவங்கி கடந்த இரு தினங்களில் 43.81 மி.மீ மழை பதிவாகி உள்ளது. எனவே வடகிழக்கு பருவமழையை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். விவசாயிகள் கூறுகையில், மாவட்டத்தில் 19 ஆண்டுகளில் இல்லாத வகையில் தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. ஆனால் கண்மாய், குளங்களில் தண்ணீரில்லை. நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்தில் உள்ளது. மக்களுக்கு குடிநீரில்லை. கண்மாய்கள், குளங்களில் குடிமராமத்து திட்ட பணிகள் 50 சதவீதம் கூட நிறைவடையாத நிலையில் வடகிழக்கு பருவமழை பெய்து தண்ணீர் வந்தாலும் தேக்கி வைக்க வழியில்லை. மாவட்ட நிர்வாகம் வரும் காலத்தை கருத்தில் கொண்டு ஆறுகள், கண்மாய், குளங்களில் மண் அள்ள தடை விதிக்க வேண்டும். நீர் வரத்து பாதைகளை தூர்வாரி பராமரிப்பு செய்ய வேண்டும். இல்லையென்றால் உணவும், குடிநீரும் எதிர்கால சந்ததிக்கு கேள்விக்குறியாகும் என தெரிவித்தனர்.


Tags :
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...