×

காரியாபட்டி நகர் பகுதிகளில் போதிய கழிப்பறைகள் அமைக்க வேண்டும் பொதுமக்கள், வியாபாரிகள் வலியுறுத்தல்

காரியாபட்டி, அக்.18: காரியாபட்டி நகர் பகுதியில் பேரூராட்சி சார்பில் கழிவறைகள் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, மல்லாங்கிணறு ஆகிய பேரூராட்சிகள் வளர்ந்து வரும் பகுதிகளாகும். காரியாபட்டி, மல்லாங்கிணற்றை சுற்றி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்க, விற்க காரியாபட்டிக்கு வருகின்றனர். ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். அப்படி வரும் மக்களில் ஆண்களுக்கு  அவசரம் ஏற்பட்டால் ஏதேனும் மறைவில் சென்று சிறுநீர் கழித்து விடுகின்றனர்.  பெண்கள் அவசரத்திற்கு பஜாரில் இருந்து பஸ் ஸ்டாண்டிற்கு சுமார் அரை  கிலோமீட்டர் தூரம் வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் அவர்களுக்கு பல  சிரமங்கள் ஏற்படுகிறது. வியாபார நோக்கத்தோடு மெயின் ரோட்டில் பேரூராட்சி மற்றும் தனியார் கடைகள் கட்டி வாடகைக்கு விடுகின்றனர். இந்த கடைகளை கட்டும் தனியார்  அருகில் முறையாக கழிப்பறைகள் அமைப்பதில்லை. இதனால் கடைகள் வைத்திருப்பவர்கள்  சிறுநீர் கழிக்க இரு சக்கர வாகனங்களில் சென்று ஐயப்பன் கோவில், தோப்பூர்  ரோடு, காரியாபட்டி யூனியன் ஆபீஸ் பின்புறம் என அலைய வேண்டிய சூழ்நிலை  உள்ளது. எனவே காரியாபட்டி நகர் பகுதியில் போதிய கழிவறை கட்ட வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மக்கள் கூறுகையில், தமிழகத்தை திறந்தவெளி மலம் கழித்தல்  இல்லாத மாநிலமாக ஆக்குவோம் என சட்டசபையில் தமிழக முதல்வர் அறிவித்தார்.  மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.  கிராம  ஊராட்சிகளில் வீடுகள்தோறும் கழிப்பறை அமைப்பது மற்றும் திறந்த வெளியில்  மலம் கழித்தலை தடை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இவை கிராம  ஊராட்சிகளுக்கு மட்டும் தானா? பேரூராட்சி, நகராட்சிகளுக்கு கிடையாதா? காரியாபட்டியில் பஸ் நிலையம், முக்குரோடு ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் கட்டண கழிப்பறைகள் அமைத்துள்ளனர். இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர். காரியாபட்டியில் ஒவ்வொரு வார்டுகளிலும் பொது கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. அவை முறையாக தண்ணீர் வசதியில்லாமல் பயன்பாடு இல்லாமல் கிடக்கின்றன. சில கழிப்பறைகள் முள் வேலியிட்டு காட்சிப்பொருளாக உள்ளது. இதை பயன்படுத்த முடியாத மக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மக்கள் நடமாட்டம் உள்ள பஜார் கடைவீதி மற்றும் அருப்புக்கோட்டை-மதுரை மெயின் ரோட்டில் ஆங்காங்கே கழிப்பறைகள் அமைத்து பொதுமக்களின் நலன் காக்க குறிப்பாக பெண்களின் சிரமத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : public ,traders ,city ,Kariyapatti ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...