×

மக்களிடம் மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

காரைக்குடி, அக்.18:  டெங்கு கொசு உற்பத்தியாகாமல் தடுக்க குடியிருக்கும் பகுதிகளில் மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார். காரைக்குடி அருகே கல்லலில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு, அங்கன்வாடி பணியாளர்கள் ஊராட்சி செயலாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பாளர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு குறித்த கூட்டம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் ஆல்வின் ஜோம்ஸ் வரவேற்றார். கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்து பேசுகையில், ‘‘மாணவர்கள் டெங்கு கொசு எவ்வாறு வளர்ந்து கொசு உற்பத்தியாகி காய்ச்சல் பரவுகிறது என தெரிந்து கொள்ள வேண்டும். சாதாரண கொசுக்கள் கழிவுநீரில் வளரும். ஆனால் டெங்கு கொசு நல்லநீரில் வளரும். எனவே வீடுகளில் தேங்காய் சிரட்டை, பாத்திரத்தில் கொசு உற்பத்தியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு டெங்கு கொசு இருந்தால் போதும் அந்த பகுதிக்கே காய்ச்சலை பரப்பிவிடும்.

மாணவர்களிடம் ஒரு விசயத்தை கூறினால் அது அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லப்படும். எனவே தான் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதார தூதுவர்களாக மாணவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதிகளில் டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வலியுறுத்த வேண்டும்.  டெங்கு பாதிப்பில்லா மாவட்டமாக சிவகங்கையை மாற்ற மாணவர்களை ஒத்துழைப்பு தேவை’’ என்றார்.
நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் யசோதாமணி, மாவட்ட பூச்சியியல் வல்லுநர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரவின், ஜெயராமன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன், சுகாதர ஆய்வாளர்கள் கண்ணன், கிருஷ்ணவேணி, அழகப்பன், சோமசுந்தரம், கருணாநிதி, ஜெயகாந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் அருள்ஜெயசீலன் நன்றி கூறினார்.





Tags : Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...