வாறுகால்,சாலைகள் இல்லாமல் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் கடும் அவதி அலட்சியத்தில் நகராட்சி நிர்வாகம்

பரமக்குடி, அக்.18:  பரமக்குடி நகர் பகுதிகளில் முறையான வாறுகால் மற்றும் சாலைகள் அமைக்காததால், மழையால் சேறும் சகதியுமாக சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கிறது. இதனால் பொதுமக்கள், வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை உள்ளது. பரமக்குடி நகராட்சி ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக வார்டுகளை கொண்ட வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. மத்திய,மாநில அரசுகளின் மூலம் வழங்கப்படும் மேம்பாட்டு நிதி, திட்டங்களுக்கான நிதிகள், எம்.எல்.ஏ., எம்.பி.,நிதி பெறப்பட்டு பயன்படுத்தி வருகின்றது. இந்த நிதிகள் சுகாதார மற்றும் நகர் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிதிகளை முறையாக பயன்படுத்தாமல், சாலை,வரத்து கால்வாய், குடிநீர் இணைப்பு, சுகாதார பணிகள் என அலுவலக பணிகளை தவிர மற்ற அனைத்து பணிகளையும் நகராட்சி நிர்வாகம் ஆளும் கட்சினருக்கு ஒப்பந்தம் கொடுப்பதால், பெயரளவில் பணிகளை முடித்து பல கோடிகளை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுத்தியுள்ளனர். வாறுகால் அமைப்பது முதல் சாலை அமைப்பது வரை அனைத்து பணிகளிலும் சில நகராட்சி அலுவலர்கள் பணம் பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதால் வாறுகால் சேதமடைந்து சாலைகளில் கழிவுநீர் தேங்கியுள்ளது. ஒரு மாதத்திற்கு முன் அமைக்கப்பட்ட சாலைகள் மண் தரையாக காட்சியளிக்கிறது. காட்டுபரமக்குடி பூவைசிய இந்திரகுல தெரு, முல்லைநகர், புது நகர், கிருஷ்ணா தியேட்டர் பகுதிகள், இமானுவேல் சேகரன் நினைவி சாலை, முனியாண்டிபுரம் காந்தி நகர், பாலன் நகர், பொன்னையாபுரம் உள்ளிட்ட 36 வார்டுகளிலும் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் தேங்கியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக பெய்ந்து வரும் மழையால் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் சாக்கடை நீரில் கலந்து தெருக்களில் ஆறாக ஓடுகிறது. மேலும், சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. முனியாண்டிபுரம், பூவைசிய இந்திரகுல தெரு விரிவாக்கம் பகுதியில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் வீட்டிற்கு செல்ல முடியாமல் உறவினர்களின் வீடுகளில் பலர் தங்கியுள்ளனர். இந்த பகுதிகளை சேர்ந்த ஏரியாவாசிகள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் விட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். பொதுமக்கள் சார்பாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து முனியாண்டிபுரம் முத்துராக்கு கூறுகையில், நகரின் முக்கியமான பகுதியில் இந்த ஏரியா உள்ளது. பல ஆண்டுகளாக சாலை மற்றும் வாறுகால் அமைக்கவேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். நகராட்சி நி்ர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இரவு நேரங்களில் தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரால் கொசு உற்பத்தியாகி தூக்கம் இல்லாநிலை உருவாகியுள்ளது. இனி ஓட்டு கேட்டு வருபவர்களை விரட்டி அடிப்போம் என்றார். காட்டுபரமக்குடி கருப்பையா, காட்டுபரமக்குடி காலனி தெரு பூவைசிய இந்திரகுல தெருவில் வாறுகால் வசதி ஏற்படுத்தாமல் தரமற்ற சாலையை அமைத்து விட்டு சென்று விட்டனர், இதனால் சாக்கடை தெருக்களில் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் சாலைகள் இல்லாத பகுதிகளில் சேறும் சகதியுமாக உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து புறக்கனிக்கப்படுவதால் சுகாதார சிர்கேட்டின் உச்சத்தில் காட்டு பரமக்குடி உள்ளது என்றார்.


Tags : administration ,public ,
× RELATED சென்னையில் இன்று வழக்கம் போல்...