×

தடை விதித்த மீன்வளத்துறை திடீர் தாராளம்? விசைப்படகுகளுக்கு மட்டும் அனுமதி பாரபட்சம் என பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் புகார்

ராமேஸ்வரம், அக். 18: கடலுக்கு செல்ல தடை விதித்துள்ள நிலையில், பாம்பன் விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். இதனால் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக நாட்டுப்படகு மீனவர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதோடு, மழையும் பெய்வதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள், 2 நாட்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து நேற்று முன்தினம் மாலை மீன்வளத்துறை உத்தரவிட்டது. ஆனால் அன்று காலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டதால், மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடிக்க செல்லும் பாம்பன், மண்டபம் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லாமல் படகுகள் கரை நிறுத்தப்படும் என கூறப்பட்டது.கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பிய நிலையில், பாம்பன் விசைப்படகு மீனவர்கள் 90க்கும் மேற்பட்ட படகில் நேற்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. வழக்கம்போல கடலுக்கு செல்ல பாம்பன் மீன்வளத்துறை அதிகாரிகள், அனுமதி டோக்கன் வழங்கியதால் கடலுக்கு சென்றதாக விசைப்படகில் சென்றவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 4ம் தேதி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த கூட்டத்தில், கடலுக்கு படகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டால் அனைத்து தரப்பு மீனவர்களும் படகுகளை கரையில் நிறுத்தி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார். கலெக்டரின் வேண்டுகோளால், நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஆனால் முதல் நாள் தடை விதித்து விட்டு நேற்று காலை விசைப்படகுகளுக்கு மட்டும் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்து பாரபட்சம் காட்டியுள்ளதாக நாட்டுப்படகு மீனவர்கள் தெரிவித்தனர்.


Tags : Bamboo fishermen ,
× RELATED ஓராண்டு சம்பளம் நன்கொடை: எடியூரப்பா தாராளம்