×

மேலூர் மார்க்கெட்டில் காய் வாங்க போனால் நோய் வாங்கும் அவலம்

மேலூர், அக். 18: மேலூர் தினசரி மார்க்கெட் சேறும் சகதியுமாக மாறி சுகாதாரமற்ற நிலையில் நோய் பரப்பும் கேந்திரமாக மாறி உள்ளது.மேலூர் செக்கடியில் நெரிசல் மிக்க பகுதியில் தினசரி மார்க்கெட் உள்ளது. நாள் தோறும் மேலூர் நகர் மட்டுமல்லாது சுற்றுப்புறங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து பொதுமக்கள் இங்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். காய்கறிகளுடன் சேர்த்து இப்பகுதியில் மளிகை கடைகள், இறைச்சி கடைகள், ஏலக்கடைகள் என ஏராளமான கடைகளும் உள்ளன.சமீபத்தில் நகராட்சி இந்த மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் தினசரி வாடகை வசூலிக்க ஏலம் விடுத்தது. இதில் இந்த மார்க்கெட் ரூ.1 கோடியை தாண்டி ஏலம் போனது. ஆண்டுக்கு இவ்வளவு வருவாய் ஈட்டி தரும் இந்த மார்க்கெட் பகுதியை பராமரிக்க ஏனோ நகராட்சி நிர்வாகத்திற்கு மனது இல்லை.

மாக்கெட்டின் உட்பகுதியில் தற்போது பெய்த மழையால் சேறு சகதியுமாக நடக்கவே முடியாத நிலையில் உள்ளது. டூவீலரில் இந்த வழியாக செல்பவர்கள் சகதியில் சிக்கி கீழே விழும் நிலை ஏற்படுகிறது. துர்நாற்றத்துடன் சுகாதாரமற்ற நிலையில் உள்ள இப்பகுதியை சீர் செய்ய வேண்டும் என்றும், இப்பகுதிகளில் பேவர் பிளாக் அமைத்து தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கடைக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இத்துடன் மார்க்கெட் பகுதியில் உள்ள காம்பவுண்ட் சுவர்களில் எல்லாம் செடிகள் வளர்ந்து, எப்போது வேண்டுமானலும் சுவர் கீழே விழும் நிலையில் உள்ளது. மொத்ததில் மேலூர் மார்க்கெட்டிற்கு காய் வாங்க வந்தால், காயுடன் நோயும் சேர்த்து இலவசமாக வழங்கப்படுகிறது என்பதில் ஐயமில்லை. நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags : market ,Melur ,
× RELATED திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் இன்று மாலை முதல் துவங்கும்