போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று போராட்டம் பண்டிகை முன்பணம் வழங்காததை கண்டித்து

மதுரை, அக். 18:தீபாவளிக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், பண்டிகை முன்பணம் வழங்காததை கண்டித்து, போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றுவோருக்கு, தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக பண்டிகை முன்பணம் வழங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டுக்கான பண்டிகை முன்பணம் இதுவரை வழங்கப்படவில்லை. தீபாவளிக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், பண்டிகை முன்பணம் வழங்காததால் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதையடுத்து, அனைத்து தொழிற்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில், இது உடனடியாக மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தலைமையகம் முன்பு இன்று அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

Advertising
Advertising

இதுகுறித்து தொமுச மண்டல பொதுச்செயலாளர் மேலூர் அல்போன்ஸ் கூறுகையில், “மதுரை கோட்டத்திற்குட்பட்ட மதுரை, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மண்டலத்தில் சுமார் 12 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். இவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் பண்டிகைக்கால முன்பணம் வழங்க வேண்டும். இதற்காக சுமார் பதிமூன்று கோடி ரூபாய், போக்குவரத்து கழகத்திற்கு தேவைப்படும். ஒரு மாத காலத்திற்கு முன்பாக வழங்கினால்தான் தங்கள் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பணியான போக்குவரத்து கழக பணியை ஊழியர்களால் மேற்கொள்ள முடியும்.மாறாக, கடைசி காலக்கட்டத்தில் வழங்கினால், அந்த பணத்தை கொண்டு அவர்கள் கடைசி நேரத்தில்தான் பொருட்கள் வாங்க நேரத்தை செலவிட வேண்டியது வரும். அப்போது குறிப்பிட்ட அளவுக்கு அவர்களால் பணிக்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டு வழக்கமான போக்குவரத்து தடைபடும் நிலை ஏற்படலாம். எனவே இதை தவிர்க்கும் விதமாக போக்குவரத்து கழக நிர்வாகம் உடனடியாக பண்டிகை முன்பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: