×

ஆம்பூர் அருகே சிறுத்தை கடித்து குதறியதில் பசுமாடு, கன்று குட்டி பலி

ஆம்பூர், அக். 18: ஆம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சிறுத்தை கடித்து குதறியதில் பசுமாடு மற்றும் கன்றுக்குட்டி பலியானது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம், ஆம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட துருகம் காப்புக்காடு, மாச்சம்பட்டு மற்றும் பல்லலகுப்பம் காப்புக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில், ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் பகுதியில் விவசாயிகள் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். ஆனால், அப்பகுதி காப்பு காடுகளில் உள்ள சிறுத்தைகள் கால்நடைகளை கடித்துக் குதறி வந்தன.

இதனால், அப்பகுதியில் வனத்துறை சார்பில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க முயன்றனர். ஆனால் இதுவரை சிறுத்தையை பிடிக்க முடியவில்லை. தற்போது, பெய்துவரும் மழை காரணமாக காடுகளில் செடி, கொடிகள் மற்றும் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதால் சிறுத்தைகள் காட்டை விட்டு வெளியேறுவது சமீப காலமாக குறைந்து வந்ததால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

இந்நிலையில் ஆம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சொக்கரிஷி குப்பம் அருகே உள்ள நாட்டான் ஏரி பகுதியில் நேற்று காலை சிறுத்தை ஒன்று காட்டைவிட்டு வெளியேறியது. அப்பகுதியில் விவசாய நிலத்தில் இருந்த அமுதா என்பவருக்கு சொந்தமான பசு மாடு மற்றும் கன்றுக்குட்டியை கடித்து குதறியது. இதில் பசுமாடும், கன்றுக்குட்டி பலியானது. தகவலறிந்த ஆம்பூர் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், உதவி வனப்பாதுகாவலர் ராஜ்குமார் தலைமையில் துப்பாக்கி ஏந்திய வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : leopard bite ,Ambur ,
× RELATED பொருட்காட்சி திடல் வணிக வளாக கட்டுமான...