தீபாவளி பண்டிகையையொட்டி குத்துவிளக்குகள் விற்பனை மும்முரம்

கும்பகோணம், அக். 18: தீபாவளி பண்டிகையையொட்டி கும்பகோணம் பகுதியில் குத்துவிளக்குகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. குத்து விளக்குகள் ரூ.200 முதல் ரூ.20 ஆயிரம் விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் தீபாவளி எனும் தீப ஒளி திருநாள் வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது.தீபாவளியன்று அனைவரும் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் (கங்கா குளியல்) செய்வர். பின்னர் புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறி கொள்வர். மேலும் பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபஒளி திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கையாகும்.

இத்தகைய சிறப்பு பெற்ற தீபாவளியையொட்டி புதுமண தம்பதிகளுக்கு பெண் வீட்டிலிருந்து விளக்குகளை சீதனமாக வழங்குவர். சில வீடுகளில் பித்தளை பாத்திரங்கள், அன்னவிளக்கு, காமாட்சி விளக்கு, ஐந்துமுக விளக்குகள் என பல்வேறு வகையான விளக்குகளை வழங்குவர். தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன் விளக்கை எடுத்து சென்று பெண் திருமணம் செய்து கொடுத்த மாப்பிள்ளை வீட்டில் சீதனமாக கொடுப்பர். அந்த புதுப்பெண் தீபாவளியன்று புத்தாடை அணிந்து சீதனமாக தனது தாய் வீட்டிலிருந்து வழங்கிய விளக்கை பூஜையறையில் ஏற்றி வழிபடுவார். தனது மகளை திருமணம் செய்து கொடுத்த வீட்டில் இருளகற்றி, அருளொளி எனும் தீபஒளி பரவ வேண்டும் என்பதால் குத்துவிளக்குகள் வழங்கப்படுவது காலம் தொட்டு நடந்து வருகிறது.

இத்தகைய சிறப்பு பெற்ற விளக்குகள் கும்பகோணம், நாச்சியார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் தயாரிக்கப்பட்டு தமிழகம் மட்டுமில்லாமல் வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கும்பகோணம்ட நாச்சியார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் குத்துவிளக்குகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. தினம்தோறும் ஆயிரக்கணக்கான குத்துவிளக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குத்துவிளக்குகள் ரூ.200 முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை

செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: