ஆக்கிரமிப்பில் இருந்த 40 ஆயிரம் சதுர அடி நிலம் மீட்பு அண்ணாநகர் டவர்ஸ் கிளப் கட்டிடத்துக்கு அதிரடி சீல்

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் டவர்ஸ் கிளப், கடந்த 1989ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த கிளப் நிர்வாகம், தங்களுக்கு நிலம் ஒதுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்தது. அதை ஏற்று, கலையரங்க கட்டிடத்துடன் சேர்த்து 5,827 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த நிலத்திற்கு அருகில், விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக தேர்வு செய்யப்பட்டு காலியாக இருந்த 40 ஆயிரம் சதுர அடி நிலத்தையும், டவர்ஸ் கிளப் பயன்படுத்தி வந்தது. அந்த நிலத்தில் அனுமதியின்றி  கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதாலும், ஒப்பந்தத்தை புதுப்பிக்காததாலும், நிலத்தை பயன்படுத்தியதற்காக ரூ.48.85 லட்சம் செலுத்தி விட்டு, இடத்தை காலி செய்யும்படி, கிளப் நிர்வாகத்திற்கு 2012ம் ஆண்டில் மாநகராட்சி உத்தரவிட்டது. மாநகராட்சி மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் டவர்ஸ் கிளப் சார்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

விஸ்வேஸ்வரய்யா பூங்காவிற்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்த நேற்று மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து அண்ணாநகர் டவர்ஸ் கிளப் ஆக்கிரமிப்பு செய்துள்ள 40ஆயிரம் சதுர அடி நிலத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் வட்டார துணை  ஆணையர் தர் மற்றும் 50க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் கையகப்படுத்தினர். அதனை தொடர்ந்து மாநகராட்சிக்கு சொந்தமான  கையகப்படுத்தப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, இரும்பு வலைகளால் ஆன வேலி அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து  செய்தியாளர்களைச் சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ‘‘சென்னை  மாநகராட்சிக்கு சொந்தமான இந்த இடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும், கட்டிடங்களை இடிப்பது குறித்து இதன்பிறகு ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆக்கிரமிப்பு செய்தவர்கள்  மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: