×

தீபாவளி பம்பர் பரிசாக சொகுசு கார் வழங்குவதாக கூறி வாலிபரிடம் 1 லட்சம் மோசடி

சென்னை: மயிலாப்பூர் ஏகாம்பரம்பிள்ளை தெருவை சேர்ந்தவர் வினோத் (28), வீட்டு வேலை செய்து வருபவர். இவரது செல்போனுக்கு,  கடந்த 10ம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், பிரபல கார் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், உங்கள் செல்போன் எண்ணுக்கு தீபாவளி பம்பர் பரிசாக 12.80 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் விழுந்துள்ளது, என்று கூறியுள்ளார். முதலில் சந்தேகமடைந்த வினோத், எனது செல்போன் நம்பர் உங்களுக்கு எப்படி கிடைத்தது, என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், குலுக்கல் முறையில் உங்கள் செல்போன் எண்ணுக்கு கார் பரிசு விழுந்ததாக கூறி திசை திருப்பி உள்ளார். உடனே, உங்களுக்கு கார் வேண்டும் என்றால் சொல்லுங்கள், இல்லையென்றால் காருக்கான பணம் வேண்டும் என்றாலும் நாங்கள் கொடுக்கிறோம், என்று கூறியுள்ளார். ஏழ்மையில் தவித்து வந்த வினோத், எனக்கு கார் வேண்டாம். காருக்கான பணத்தை கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த நபர், பணம் ேவண்டும் என்றால், நிர்வாக செலவுக்காக நீங்கள் எங்கள் வங்கி கணக்கிற்கு ₹2 லட்சம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால், அடுத்த ஒரு மாதத்தில் 12.80 லட்சம் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்து சேரும் என்று கூறியுள்ளார். மேலும், வங்கி கணக்கு விவரங்களையும் எஸ்எம்எஸ் அனுப்பி உள்ளார். 12.80 லட்சம் கிடைக்கப்போகிறது என்ற ஆசையில், நண்பர்களிடம் கடன் வாங்கி 1 லட்சத்தை அந்த வங்கி கணக்கில் வினோத் செலுத்தி உள்ளார். ஆனால், அந்த நபர் மேலும் பணம் கேட்டுள்ளார். இதனால், சந்தேகமடைந்த வினோத்,  மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர் பேசிய செல்போன் எண் மற்றும் 1 லட்சம் பணம் செலுத்திய வங்கி கணக்கு எண்ணை வைத்து மோசடி நபரை தேடி வருகின்றனர். சாமியாருக்கு வலை: தி.நகர் சித்தி விநாயகர் கோயில் தெருவை  சேர்ந்தவர் செல்வி (55).  இவரது மகள் வித்யாவுக்கு 7 வருடத்திற்கு முன்   திருமணமாகி, கணவருடன் சூளைமேட்டில் வசித்து வருகிறார். ஆனால், இதுவரை  குழந்தை  இல்லை. இதனால் செல்வி, சாமியார் ஒருவரை சந்தித்து தனது மகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லாதது குறித்து தெரிவித்தார்.

அப்போது அவர், வித்யாவுக்கு செய்வினை இருப்பதாகவும், அதனை  சரிசெய்ய 4 லட்சம்  செலவாகும், என்றும் கூறியுள்ளார். இதற்காக, செல்வி  முதலில் 1 லட்சம் தருவதாக கூறியுள்ளார். அந்த பணத்தை நேற்று ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் வைத்து, சாமியாரிடம் கொடுத்துள்ளார்.  
அதை பெற்றுக்கொண்ட சாமியார், பூஜை  செய்வதற்கான பொருட்களை வாங்கி வருவதாக கூறிவிட்டு, பணத்துடன் தலைமறைவாகினார். இதுகுறித்து செல்வி கொடுத்த  புகாரின் பேரில்  போலீசார், சாமியாரை தேடி வருகின்றனர்.

Tags : Diwali ,
× RELATED ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி செய்த பெண் கைது