காவலர் நினைவு நாளை முன்னிட்டு சாந்தோம் முதல் ஆர்.கே. சாலை வரை 19, 21ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் : போலீசார் அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக காவல் துறை தலைமை அலுவலகத்தின் முன்பு அமைந்துள்ள காவலர்  நினைவிடத்தில் வரும் 21ம் தேதி காலை 8 மணிக்கு காவலர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.  இதனால் இன்று மற்றும் நாளை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. எனவே, ஒத்திகையின் இறுதி நாளான 19ம் தேதி மற்றும் 21ம் தேதி ஆகிய இரு நாட்களுக்கு காலை 7 மணி முதல் 9 வரை கீழ்காணும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Advertising
Advertising

* சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் இலகு ரக வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் காரணீஸ்வரர் கோயில் தெரு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி காரணீஸ்வரர் பகோடா தெரு, அம்பேத்கர் பாலம் மற்றும் நடேசன் சாலை சந்திப்பு வழியாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை அல்லது காமராஜர் சாலை   செல்லலாம்.

* சாந்தோம் சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் மாநகர பேருந்துகள் சாந்தோம் சிக்னலில் இடதுபுறம் திரும்பி கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர் பிரதான சாலை மற்றும் டாக்டர் பி.எஸ்.சிவசாமி சாலை வழியாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சென்று அவரவர் இலக்கை அடையலாம்.

* கண்ணகி சிலையிலிருந்து காமராஜர் சாலை வழியாக சாந்தோம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் லாயிட்ஸ் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கடற்கரை அணுகு சாலை வழியாக கடற்கரை சாலைக்கும், கலங்கரை விளக்கம் வழியாக காரணீஸ்வரர் கோயில் சந்திப்பிற்கும் செல்லலாம்.

* டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக கலங்கரை விளக்கம் மற்றும் சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை எம்.ஆர்.டி.எஸ் அருகில் இடதுபுறம் திரும்பி லாயிட்ஸ் சாலை அணுகு சாலை வழியாக காமராஜர் சாலைக்கும், கடற்கரை அணுகு சாலை வழியாக கலங்கரை விளக்கம் மற்றும் சாந்தோம் செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: