முறையான வடிகால் வசதி இல்லாததால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது : பொதுமக்கள் சாலை மறியல்

பூந்தமல்லி: திருவேற்காடு அருகே வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அடுத்த திருவேற்காடு நகராட்சி, அயனம்பாக்கம் பகுதியில் அம்பேத்கர் தெரு உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கழிவுநீருடன் மழைநீர் கலந்து பல வீடுகளுக்குள் புகுந்தது. மேலும் 50க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்தது. இதனால், 3 வீடுகளில் இருந்த பொருட்கள் நீரில் மூழ்கின. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் அம்பத்தூர்-வானகரம் சாலையில் நேற்று திரண்டனர். பின்னர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ‘‘மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில் குழந்தைகளை வைத்துக்கொண்டு கழிவுநீரில் அவதிப்பட்டு வருகிறோம். அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் யாரும் வரவில்லை’’ என குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து தகவலறிந்து திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் யாரும் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து பூந்தமல்லி தாசில்தார் காந்திமதி மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீரை அப்புறப்படுத்த உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று ஒரு மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: