அக்கா கணவர் கொலைக்கு பழிக்குப்பழி ஓராண்டுக்குப்பின் குற்றவாளியை வெட்டி கொன்ற மைத்துனர்கள் : குன்றத்தூர் அருகே பரபரப்பு

பல்லாவரம்: குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர், காலடிப்பேட்டை, நாகரத்தினம் தெருவை சேர்ந்தவர் பாபு (எ) போகபதி பாபு (46). இவரது மகள் சவுபாக்கியவதி (21). இவரை கடந்தாண்டு காலடிப்பேட்டை, காந்தி தெருவை சேர்ந்த மோகன் (27) என்பவர், காதல் திருமணம் செய்தார். இந்த திருமணத்தை மோகனின் அக்கா கணவரும், திமுக பிரமுகருமான கிரிராஜன் (42) நடத்தி வைத்ததாக கூறப்படுகிறது.  இதனால், ஆத்திரமடைந்த சவுபாக்கியவதியின் தந்தை பாபு, கடந்தாண்டு  செப்டம்பர் 10ம் தேதி, நந்தம்பாக்கம் அஞ்சுகம் நகரில் வைத்து கிரிராஜனை ஓட ஓட வெட்டி படுகொலை செய்தார். இந்த வழக்கில் பாபு உட்பட நான்கு பேரை கைது செய்த போலீசார், அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். சமீபத்தில், சிறையில் இருந்து வெளியே வந்த பாபு, காலடிப்பேட்டையில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு குடும்பத்துடன் குன்றத்தூர் அடுத்த நத்தம் பகுதியில் குடியேறினார். இந்நிலையில், கடந்த 17 நாட்களுக்கு முன், கிரிராஜனின் முதலாமாண்டு நினைவு தினம் வந்தது. அதில் சோகத்துடன் பங்கேற்ற அவரது மைத்துனர்கள் மோகன் (26) மற்றும் கிருஷ்ணன் (25) ஆகியோர் தனது அக்கா கணவர் கிரிராஜனின் மறைவிற்கு காரணமான பாபுவை பழிவாங்க வேண்டும் என்று சபதம் எடுத்தனர். அதற்காக, சமயம் பார்த்து காத்திருந்தனர்.

Advertising
Advertising

இந்நிலையில், கிரிராஜன் படுகொலை செய்யப்பட்ட நந்தம்பாக்கம், அஞ்சுகம் நகருக்கு அடுத்த தெருவான நாலியப்பன் சாலை, பாரதியார் நகர் மெயின்ரோடு பகுதியில் நேற்று பாபு தனியாக பைக்கில் செல்வதாக மோகன் மற்றும் கிருஷ்ணன் தரப்பினருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக அவர்கள், தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து, பாபுவை வழிமறித்து சரமாரியாக வெட்டினர். சுதாரித்துக்கொண்ட பாபு அங்கிருந்து தப்பியோடினார். ஆனாலும், ஓட ஓட விரட்டி, அவரது தலையில் அரிவாளால் வெட்டினர். இதில் பாபு அணிந்திருந்த ஹெல்மெட் சுக்கு நூறாக சிதறி, தலை சிதைந்து  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்து கடை வீதியில் இருந்த பொதுமக்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து சாவகாசமாக தப்பிச் சென்றனர்.

தகவலறிந்து வந்த குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பாபு உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மோகன், கிருஷ்ணன் தலைமையிலான கும்பலை தேடி வருகின்றனர். இதனிடையே கொலை நடந்த இடத்தை அம்பத்தூர் சரக காவல் துணை ஆணையர் ஈஸ்வரன் மற்றும் உதவி ஆணையர் சம்பத் ஆகியோர் பார்வையிட்டு, கொலைக்கான காரணத்தை கேட்டறிந்தனர். கொலை செய்யப்பட்ட பாபு மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வேறு யாருக்கேனும் இந்த கொலையில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: