×

கை கொடுக்குமா பருவமழை :விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருவள்ளூர், அக். 18: வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால் விவசாயிகள் மத்தியில் சற்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.விவசாயமே பிரதான தொழிலாக கொண்ட திருவள்ளூர் மாவட்டத்தில் ஆண்டின் சராசரி மழையளவு 876மி.மீட்டர். இது கடந்த 10 ஆண்டுகளின் மொத்த சராசரியாகும். இதில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையே விவசாயத்திற்கும், நிலத்தடி நீர் மட்டத்திற்கும் பெரிதும் உதவுகிறது.  இந்நிலையில் ஆண்டின் மொத்த மழையில் 50 சதவீதமே மழை பெய்ததால் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி விவசாயம் பாதித்ததோடு, நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்தது. இதனால், மாவட்டத்தில் பல பகுதிகளில் குடிநீர் பிரச்னை தலைதூக்கியது. இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவில் மழை பெய்யாததால் வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்கள் அவதிப்பட்டு வருவதோடு குடிநீர் பிரச்னையில் அல்லாடி வந்தனர்.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை நேற்று முதல் துவங்கி அவ்வப்போது  மழை பெய்து வருவதால் விவசாயம் கைகொடுக்கும் என்கிற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக பூந்தமல்லியில் 61 மி.மீட்டரும், குறைந்தபட்சமாக ஆர்.கே.பேட்டையில் 7 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

Tags :
× RELATED அனைத்து நீர்த்தேக்கங்களிலும் இருப்பு...