×

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்

திருவள்ளூர், அக். 18: திருவள்ளூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது தண்டலம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிகை, காலனி ஆகிய பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் அடிப்படை தேவைகளுக்கும், மருத்துவமனைக்கும் திருவள்ளூர், கடம்பத்தூர் அல்லது பேரம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்குத்தான் செல்ல வேண்டும். ஆனால், கிராமத்தில் இருந்து செல்ல பஸ் வசதி கிடையாது. ஏற்கனவே இயங்கி வந்த மினி பஸ்சும் நிறுத்தப்பட்டுவிட்டது. கூவம் ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி கடம்பத்தூர் செல்ல வேண்டியுள்ளது.

எனவே, திருவள்ளூரில் இருந்து மணவாளநகர், அதிகத்தூர், தண்டலம், அகரம் வழியாக பேரம்பாக்கம் வரை அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும். கூவம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும். தரமான சாலை வசதி செய்து தரவேண்டும் என பலமுறை அதிகாரிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எதுவும் இல்லை. இதையடுத்து, கிராம மக்கள் 100க்கு மேற்பட்டோர் நேற்று காலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு கடம்பத்தூர் ஒன்றிய அதிகாரிகள் சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், ‘மாவட்ட கலெக்டரிடம் உங்களது கோரிக்கைகளை கூறி நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதி அளித்தனர். இருந்தாலும் உண்ணாவிரத போராட்டம் நேற்று மாலை வரை நடைபெற்றது.

Tags : facilities ,
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...